மதுரை,
செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் கார்த்தி, தனக்கு அரசியலில் நுழையும் எண்ணம் எதுவும் இல்லை என்றும், தொடர்ந்து நல்ல திரைப்படங்களை ரசிகர்களுக்கு வழங்குவதே தனது நோக்கம் என்றும் தெரிவித்தார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படம் செப்டம்பர் 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் தீவிர புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ‘சர்தார் 2’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக படக்குழுவினர் மதுரைக்கு சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் நடிகர் கார்த்தி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
திரைப்படங்கள் வெளியான அன்றே இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாகும் பைரசி தொடர்பாக கார்த்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நம் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு இந்தப் பிரச்சினை நன்றாகவே தெரியும். அவர் இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். நான் அவரை சந்தித்தபோது, ‘அண்ணா, மற்றவர்களை விட உங்களுக்கு இந்த பிரச்சினை நன்றாகவே தெரியும். நீங்களே இதைக் கவனித்துக்கொள்ளுங்கள்’ என்று கூறினேன்” என்றார்.
மேலும் தனது அரசியல் பயணம் குறித்து பேசிய கார்த்தி, தனக்கு அரசியலில் நுழையும் எண்ணம் எதுவும் இல்லை என்றும், தொடர்ந்து நல்ல திரைப்படங்களை ரசிகர்களுக்கு வழங்குவதே தனது நோக்கம் என்றும் தெரிவித்தார்.
‘சர்தார் 2’ படத்தின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், கார்த்தியின் இந்த கருத்துகள் தற்போது சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.