சென்னை,
இதுவரை எந்த இயக்குநரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை. நான் நடித்த திரைப்படங்களில் கிடைத்த அனுபவங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் பணியில் இறங்கியுள்ளேன். இந்தப் படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும்" என மிதுன் மகேஸ்வரன் பேசியுள்ளார்.
‘எங்கேயும் எப்போதும்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘எங்க காட்டுல மழை’, ‘சிக்கிக்கு சிக்கிக் கிச்சு’, ‘காக்டெயில்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர் மிதுன் மகேஸ்வரன். இவர் தற்போது இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
மிதுன் மகேஸ்வரன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘அரிகொம்பன்’. இப்படத்தில் தேவிகா கிருஷ்ணன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சுப்பிரமணியம் சிவா, அப்புக்குட்டி, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேஜிக் பிக்சர்ஸ் சார்பில் கரு. நாகராஜன் இப்படத்தைத் தயாரித்துள்ளார். காடுகளையும், யானைகளின் வாழ்வியலையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் இப்படம் அடுத்த மாதம் டிசம்பர் 11-ம் தேதி வெளியாக உள்ளது. இதையொட்டி, படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய மிதுன் மகேஸ்வரன், "சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையுடன் வந்த நான், தற்போது இயக்குநராகவும் மாறியுள்ளேன். இயக்குநராகப் பணியாற்றிய முன் அனுபவம் எனக்குக் கிடையாது. இதுவரை எந்த இயக்குநரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை. நான் நடித்த திரைப்படங்களில் கிடைத்த அனுபவங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் பணியில் இறங்கியுள்ளேன். இந்தப் படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் தமிழ்குமரன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.