சினிமா செய்திகள்

மக்கள் நல அரசினை வழிநடத்துவீர்கள் என்று நம்புகிறேன் - விஜய்க்கு இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய், மக்கள் நல அரசினை வழிநடத்துவார் என்று நம்புவதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வென்ற தவெக, தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்துள்ளது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவளித்ததை அடுத்து, இன்று தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்றார்.

அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், திரைத்துறையைச் சேர்ந்த பல முக்கியப் பிரபலங்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். விஜய்யுடன் நெருக்கமாக சினிமாவில் பல காலம் பயணித்த அவருடைய நண்பர்கள் பலரும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர். பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் தவெக கட்சியினர், விஜய் குடும்பத்தினர், திரிஷா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

தமிழக முதல்வராக அதிகாரபூர்வமாக விஜய் பதவியேற்று உள்ளதால், அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இது தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாட்டு முதலமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்க்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். மக்கள் நல அரசினை வழிநடத்துவீர்கள் என்று நம்புகிறேன். மக்கள் தீர்ப்பிற்கு மதிப்பளித்து தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு நல்கியிருக்கும் இந்திய தேசிய காங்கிரஸுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), விடுதலைச் சிறுத்தைகளுக்கும் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-க்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT