தான் ரஜினியுடன் நடிப்பேன் என்று என் கனவில் கூட எதிர்பார்த்தது இல்லை. அவரோடு நடித்தது எனக்கு பெரும் சந்தோஷத்தையும், மனநிறைவையும் தந்ததாக நடிகர் நமோ நாராயணா கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், யோகிபாபு உள்ளிட்டோர் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, ஹிருத்திக் ரோஷன், மிதுன் சக்கரவர்த்தி, விஜய் சேதுபதி, நமோ நாராயணா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தின் முதல் பாதியில் நமோ நாராயணா, யோகிபாபு உள்ளிட்டோரின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களைக் கவர்வதாகக் கூறப்படுகிறது. இரண்டாம் பாதியில் ஆக்ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அனிருத்தின் பின்னணி இசையும் படத்துக்கு வலுசேர்ப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ.125.25 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் இந்தியாவில் ரூ.70.25 கோடியும், வெளிநாடுகளில் ரூ.55 கோடியும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘நாடோடிகள், ஈசன், போராளி, குட்டி புலி, கொம்பன், ரஜினி முருகன், நாடோடிகள் 2, ராயன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நமோ நாராயணா. தற்போது வெளியாகி உள்ள ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தில் முக்கிய வேடத்தில் காமெடியில் அசத்தி இருக்கிறார். படத்தின் முதல்பாதியில் இவரது பங்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருப்பதோடு, அவருக்கு பாராட்டுகளையும் பெற்று தந்துள்ளது.
அவர் அளித்த பேட்டியில் “எனக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் பெரிதும் இல்லை. நான் வெளிநாட்டில் ஐடி தொழிலில் வேலை செய்து கொண்டிருந்தேன். சமுத்திரகனி மூலம் ‘நாடோடிகள்’ படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு வந்தேன். பிறகு சசிகுமார் கூட சில படங்கள் நடித்தேன். ரஜினியுடன் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்துள்ளேன். டிரெய்லரில் அவரோடு என்னை பார்த்த பிறகு பலரும் சந்தோஷமா பேசுகின்றனர். எனக்கு நடிக்க வேண்டும் என்பதில் ஆசை இல்லை, என்றாலும் நான் நடித்த சில படங்கள் பேசப்பட்டது.
‘ஜெயிலர் 2’ படம் பற்றி எல்லோரும் கேட்கிறார்கள், நான் ரஜினியுடன் நடிப்பேன் என்று என் கனவில் கூட எதிர்பார்த்தது இல்லை. அவரோடு நடித்தது எனக்கு பெரும் சந்தோஷத்தையும், மனநிறைவையும் தருகிறது. படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகர் எப்படி இருக்க வேண்டும், எப்படி பழக வேண்டும், எப்படி அன்பு செலுத்த வேண்டும் என்பதை ரஜினி மூலம் தெரிந்து கொண்டேன். எத்தனை வெற்றி பெற்ற பிறகும் மனிதன் இயல்பாக இருக்கிறார். அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்” என்றார் நமோ நாராயணா.