சென்னை,
இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கிய விஜய் ஆண்டனி, பின்னர் நடிகராகவும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார். "சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்" உள்ளிட்ட திரைப்படங்களின் வெற்றி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அவர், தற்போது "நூறு சாமி" திரைப்படத்தின் மூலம் மீண்டும் இயக்குநர் சசியுடன் இணைந்துள்ளார்.
விஜய் ஆண்டனியை கதாநாயகனாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த படங்களில் முக்கியமானது "பிச்சைக்காரன்". அந்த படத்தில் இடம்பெற்ற “நூறு சாமிகள் இருந்தாலும்” பாடல் இன்றளவும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படும் பாடல்களில் ஒன்றாக உள்ளது. அந்த பாடலின் தாக்கத்தையே பிரதிபலிக்கும் வகையில், சசி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படத்திற்கு ‘நூறு சாமி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ் மற்றும் காவ்யா அனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தின் வெளியீடு நெருங்கி வருவதால், படக்குழு தற்போது தீவிர புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற ‘நூறு சாமி’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி பல்வேறு கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனி, ‘நூறு சாமி’ திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தனக்கு எளிமையான கிராம வாழ்க்கை மிகவும் பிடிக்கும் என்றும், இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் ஒரு நல்ல கிராமத்திற்கு குடிபெயர திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
அதேநேரத்தில், கிராம மக்கள் நகர வாழ்க்கையை பார்த்து ஏமாற வேண்டாம் என்றும், நகரங்களில் பெரும்பாலானோர் மனஅழுத்தத்துடனேயே வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். “கிராம வாழ்க்கையே மேம்பட்ட வாழ்க்கை. வேலை காரணமாக மட்டுமே நாங்கள் சென்னையில் இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
திரைப்படத் துறையில் சம்பள கட்டுப்பாடு குறித்து பேசிய விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர்கள் சங்கம் முன்வைத்துள்ள விகிதாச்சார அடிப்படையிலான சம்பள முறை நல்ல அணுகுமுறை என பாராட்டினார். மேலும், அந்த முறையில் சம்பளம் பெற்ற கதாநாயகன் தான்தான் என்றும் அவர் கூறியுள்ளார். விஜய் ஆண்டனியின் இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.