சென்னை,
எனது திரைப்பயணத்தில் 'கோ' படத்தைத் தவறவிட்டதுதான் மிகப்பெரிய வருத்தம். அந்தப் படம் எனக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கும் என நடிகர் பரத் தெரிவித்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வருபவர் நடிகர் பரத். 2003-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து வெளியான 'காதல்' திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் பரத், தனது திரைப்பயணத்தில் தவறவிட்ட ஒரு திரைப்படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கோ'. ஜீவா கதாநாயகனாக நடித்த இப்படத்தில் கார்த்திகா நாயர், அஜ்மல் அமீர், பியா பாஜ்பாய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அரசியல் பின்னணியில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தனக்குக் கிடைத்தும், படப்பிடிப்பு காரணமாக அதனைத் தவறவிட்டதாக பரத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசும்போது, ''எனது திரைப்பயணத்தில் 'கோ' படத்தைத் தவறவிட்டதுதான் மிகப்பெரிய வருத்தம். அந்தப் படம் எனக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கும். 'கண்டேன் காதலை' படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது இயக்குநர் கே.வி. ஆனந்த் சாரிடமிருந்து அழைப்பு வந்தது. அப்போது படப்பிடிப்பில் இருந்ததால் அவரது அழைப்பை என்னால் எடுக்க முடியவில்லை. இதனால் அந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.
தனது திரைப்பயணத்தில் தவறவிட்ட ஒரு படத்தைப் பற்றிய பரத்தின் இந்த வெளிப்படையான பேச்சு தற்போது கவனம் பெற்றுள்ளது.