சினிமா செய்திகள்

விரைவில் விஜய் கைகளால் தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை வாங்க வேண்டும் - எஸ்.ஜே.சூர்யா

விஜய்யின் வெற்றிக்கு நடிகர் எஸ்.ஜே.சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் எடப்பாடி தொகுதியைத் தவிர்த்து மொத்தம் 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட த.வெ.க., 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாட்டின் 50 ஆண்டுகால திராவிட ஆட்சிகள் முடிவுக்கு வந்திருக்கின்றன.2024-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக கட்சி தொடங்கி, 2026-ம் ஆண்டு மாபெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவாகியிருக்கிறது.

இந்த நிலையில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது டுவிட்டரில் “வாரிசு படப்பிடிப்பின் போது உங்களிடம் ஒரு விஷயம் சொன்னேன் சார். விரைவில் உங்கள் கைகளால் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை வாங்க வேண்டும் என்று. இன்று அதில் பாதி உண்மை ஆகிவிட்டது. மீதிப் பாதியையும் நிஜமாக்கி, ‘சிறந்த நாயகன்’ என்பதை நிரூபித்து, அந்த விருதை உங்கள் கையாலேயே பெறுவதற்கு நான் இனி கடுமையாக உழைக்க வேண்டும் நண்பா. உங்களது மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துகள். நான் இப்போது மிகுந்த ‘குஷி’யாக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

விஜய்யை வைத்து ‘குஷி’ படத்தை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. விஜய்யுடன் எஸ்.ஜே.சூர்யா பல படங்களில் நடித்துள்ளார்.