நடிகர் கார்த்திக்கு எந்த நம்பிக்கையில் பெண் கொடுத்தார்கள் தெரியவில்லை என்று நடிகர் சிவகுமார் நகைச்சுவையாக பேசியுள்ளார்.
கோவையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிவகுமார், “கல்வியும், ஒழுக்கமும் இருந்தால், எதையும் சாதிக்கலாம். சூலூர் அருகில் காசி கவுண்டன் புதூர் என ஒரு ஊர் இருக்கிறது. அந்த ஊரில் ஒரு காலத்தில் குடிக்க தண்ணீர் இல்லை. பாத்ரூம் வசதியில்லை. அந்த ஊரில் 11 பேர் ஒரு பள்ளியில் படிக்க ஆரம்பித்தோம். அதில் அனைவரும் பாதியில் படிப்பை நிறுத்திவிட்டனர். நான் ஒரு ஆள் மட்டும்தான் 1957-ல் 10-ம் வகுப்பு முடித்தேன்.
மெட்ராஸ் வந்து 7 ஆண்டுகள் ஓவியம் படித்தேன். படிக்க வசதியில்லை. அதன் பிறகு அந்த துறை சரியாக வராது என முடிவு செய்து சினிமாவுக்குள் நுழைந்தேன். இது நிரந்தரமில்லாத தொழில் என்று கூறி, திருமணத்தை தள்ளி போட்டேன். 38 படங்கள் நடித்த பிறகு தான் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். சினிமாக்காரனுக்கு பொண்ணு தரமாட்டேன் என்றார்கள்.
அதுபோல, ‘பருத்தி வீரன்’ படம் பார்த்துவிட்டு வேரு ஒருவராக இருந்தால் கார்த்திக்கு பொண்ணு கொடுத்திருக்க மாட்டார்கள். அப்படியொரு ராட்சத வேஷம். நானே இருந்தாலும், பொண்ணு கொடுத்திருக்கமாட்டேன். எந்த நம்பிக்கையில், கார்த்திக்கு பெண் கொடுத்தார்கள் என தெரியவில்லை” என்றார்.
நடிகர் கார்த்தி, “உங்களுக்கு மேலேயும் யாரும் இல்லை, கீழேயும் யாரும் இல்லை என்றும் நாம் நாமாகவே இருப்போம்” என்று அறிவுரை வழங்கினார்.