சினிமா செய்திகள்

பார்ட் 2 படங்களை மறுத்தேன்... “ஜெயிலர் 2” மட்டும் ஏன்? ரஜினி விளக்கம்

‘ஜெயிலர் 2’ படத்தின் ரிலீஸை முன்னிட்டு சூப்பர் ஷோ நிகழ்ச்சி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியானது.

‘பாட்சா’ மற்றும் ‘பேட்ட’ படத்தின் இரண்டாம் பாக கதையில் தான்நடிக்க மறுத்ததாக ரஜினி கூறியுள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கிடையே, ‘ஜெயிலர் 2’ படக்குழுவினர் மற்றும் நடிகர்கள் பங்கேற்ற சூப்பர்ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசினார்.

‘ஜெயிலர் 2’ படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்ட சூப்பர்ஷோ நிகழ்ச்சி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியானது.

‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்தது ஏன் ?

ரஜினி பேசுகையில் “வழக்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தான் இசை வெளியீட்டு விழா நடத்துவோம் . இந்த முறை ஒரு மாற்றத்திற்காக வேற மாதிரி நடத்த திட்டமிட்டோம். ஆனாலும் ரசிகர்களை சந்திக்க முடியாது என்பது எனக்கு வருத்தம்தான்.

‘ஜெயிலர் 2’ படத்தை சீக்வல் என்று சொல்லமாட்டேன். சீக்வல் என்றாலே சரக்கு கம்மியாகிடுச்சு , கிரியேட்டிவிட்டி கம்மியாகிடுச்சு என்று சொல்வார்கள். இதேபோல் தான் ‘பாட்சா’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று சொன்னார்கள். அதை நான் மறுத்துவிட்டேன். அதேபோல் ‘பேட்ட’ படத்தின் இரண்டாம் பாகம் கதையை கார்த்திக் சுப்பராஜ் சொன்னார். அதில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்திற்கு முக்கிய கதாபாத்திரமாக இடம்பெற்றது. அதிலும் எனக்கு அந்த உடன்பாடு வரவில்லை.

‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி படம் ஓடிடியில் வெளியாகியபோது இன்னொரு முறை படத்தைப் பார்த்தேன். அப்போது நெல்சன் படத்தில் பல இடங்களில் இரண்டாம் பாகத்திற்கான ஹிண்ட் கொடுத்திருந்தார். இது ஒரு பெரிய நெட்வர்க் என வர்மன் கதாபாத்திரம் படத்தில் சொல்வார். ‘ஜெயிலர்’ கதாபாத்திரத்தை நெல்சன் உருவாக்கியிருக்கும் விதமும் இரண்டாம் பாகம் எடுப்பதற்கு சரியாக இருந்தது. அதேபோல் இந்த படத்தில் நான் என்னுடைய வயதை ஒத்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன்.

‘ஜெயிலர் 2’ படம் பண்ணலாம் என்று நெல்சனிடம் கேட்டபோது அவர் அதை மறுத்துவிட்டார். ஆனால் ஒரு மாதத்திற்கு பின் எனக்கு போன் செய்து ‘ஜெயிலர் 2’ படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். படத்தின் கதையை எழுத சில மாதங்கள் அவகாசம் கேட்டுவிட்டு பொறுமையாக கதையை எழுதி வந்தார். அப்படி உருவான ‘ஜெயிலர் 2’ படத்தைதான் நீங்கள் பார்க்கப் போகிறீர்கள் ” என்றார்.

SCROLL FOR NEXT