சென்னை,
1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாரதிராஜா, தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி போன்ற முன்னணி நட்சத்திரங்களை இயக்கி கவனம் பெற்றார். கிராமிய பின்னணியில் பல வெற்றிப் படங்களை உருவாக்கி "இயக்குனர் இமயம்" என்று போற்றப்பட்ட பாராதிராஜா, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இயக்குனர் பாரதிராஜா சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பாராதிராஜாவின் மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிம்பு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
பாரதிராஜா ஐயாவின் மறைவுச் செய்தியைக் கேட்டு மனம் நொறுங்கிப் போனேன்.
அவருடன் பணியாற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது, அந்த நினைவுகளை நான் என்றும் போற்றிப் பாதுகாப்பேன். அவரது அன்பும், எளிமையும், சினிமா மீதான பேரார்வமும் அவரைச் சுற்றியிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது.
தன் கதை சொல்லும் திறனால் அவர் பல தலைமுறையினருக்கு உத்வேகம் அளித்தார். அவர் தாக்கம் செலுத்திய எண்ணற்ற வாழ்க்கைகள் மற்றும் திரைப்படங்கள் மூலம் அவரது மரபு தொடர்ந்து நிலைத்திருக்கும்.
இந்த மாபெரும் இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.