கொச்சி,
என் கருத்துக்களை வெளிப்படையாகக் கூறிய பிறகு, திரைத்துறையில் எனக்கு வாய்ப்புகள் குறைக்கப்பட்டு, நான் கிட்டத்தட்ட முழுமையாக ஒதுக்கப்பட்டேன். என நடிகை பார்வதி திருவோத்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
‘பூ’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை பார்வதி திருவோத்து. 17 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்து வரும் இவர், தமிழில் குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், மலையாளத்தில் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தமிழில் ‘சென்னையில் ஒரு நாள்’, ‘மரியான்’, ‘உத்தம வில்லன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி திருவோத்து, ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தங்கலான்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் ‘ஐ நோபடி’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
சினிமாவைத் தாண்டி பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்தும் பார்வதி திருவோத்து தொடர்ந்து தனது கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பயணம் குறித்து பேசிய அவர், தனது கருத்துகளை வெளிப்படையாகக் கூறிய பிறகு திரைத்துறையில் தனக்கு வாய்ப்புகள் குறைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “என் கருத்துக்களை வெளிப்படையாகக் கூறிய பிறகு, திரைத்துறையில் எனக்கு வாய்ப்புகள் குறைக்கப்பட்டு, நான் கிட்டத்தட்ட முழுமையாக ஒதுக்கப்பட்டேன். ஆனால் என்னை திரையுலகில் இருந்து ஒதுக்க நினைத்த போதெல்லாம், மலையாள ரசிகர்கள் என் நடிப்புத் திறமையை மட்டுமே பார்த்து என்னை ஏற்றுக்கொண்டனர். ரசிகர்கள் என் மீது காட்டிய அன்பு ஒரு புனிதமான பிணைப்பு போன்றது. அதுவே என்னை இன்றும் திரையுலகில் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.