சினிமா செய்திகள்

"சாலிகிராமத்தில் ஸ்டூடியோ முன்பு வண்டி கழுவிக் கொண்டிருந்தேன்.. ஆனால் இன்று"- நடிகர் புகழ்

புகழ் நடித்துள்ள 4 இடியட்ஸ் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

சென்னை,

அறிமுக இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசன் இயக்கத்தில், லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 4 இடியட்ஸ். இந்த படத்தில், குக் வித் கோமாளி மற்றும் கேபிஒய் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான புகழ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் பிரக்யாநாயன், ரவி மரியா, அஸ்வின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுபாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கமலா தியேட்டர்வில் நடைபெற்றது. விழாவில் பேசிய புகழ் தனது வாழ்க்கைப் பயணத்தை உணர்ச்சிகரமாக பகிர்ந்தார். “சாலிகிராமத்தில் பிரசாத் ஸ்டூடியோ முன்பு வண்டி கழுவிக் கொண்டிருந்தேன். இன்று நான் நடித்துள்ள படத்தின் ஆடியோ விழா நடைபெறுகிறது. இது எனக்கு பெரும் சந்தோஷம். அப்போது என் நண்பர் உதயா வந்து ‘உன் முகம் காமெடியாக இருக்கிறது’ என்று சொல்லி நிகழ்ச்சியில் வாய்ப்பு வாங்கித் தந்தார். இன்று கதாநாயகனாக நிற்கிறேன். அதற்கெல்லாம் என் நண்பர்களுக்கே நன்றி,” என்றார்.

மேலும், “கதாநாயகி பேசும் ஆங்கிலம் எனக்கு புரியாது; நான் பேசுவது அவருக்கு புரியாது,” என்று நகைச்சுவையாக பேசி அனைவரையும் சிரிக்க வைத்தார்.