சினிமா செய்திகள்

“ஹீரோயினாக மட்டுமல்ல... வில்லியாகவும் நடிப்பேன்” - துணிச்சலாக பேசிய பாக்யஸ்ரீ போர்ஸ்

என்னை உலகறிய செய்யும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் துணிந்து நடிப்பேன் என்று நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் பேசியுள்ளார்.

சென்னை,

ஹீரோயினாக மட்டும் தான் நடிப்பேன் என்று சொல்லவே மாட்டேன். என்னை தாக்கும் கதாபாத்திரங்களாக இருக்கும் பட்சத்தில் வில்லியாகவும் நடிப்பேன். சவாலான வேடங்களையே நான் எதிர்பார்க்கிறேன். என்று நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழும் பாக்யஸ்ரீ போர்ஸ், தமிழில் 'காந்தா' படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். மராட்டியத்தை சேர்ந்த அழகு மங்கையான பாக்யஸ்ரீ போர்ஸ் தற்போது தமிழ், தெலுங்கு சினிமாவில் பிசியாக இருந்தாலும். தமிழில் சிவகார்த்திகேயனுடன் 'சேயோன்' படத்தில் நடித்து வருகிறார்.

பாக்யஸ்ரீ போர்ஸின் திரைப்பயணம்

பாக்யஸ்ரீ போர்ஸ் தனது திரைப்பயணம் குறித்து பகிர்கிறார். “பிசினஸ் மேனேஜ்மெண்ட் படித்துக் கொண்டிருக்கும்போதே மாடலிங்கில் களமிறங்கினேன். 'சினிமாவில் நடிக்கலாமே...' என்று பலரும் என்னிடம் கூறியிருக்கிறார்கள். அப்படி என்னை தேடி வாய்ப்புகள் வந்தபோது, 'சரி, இறங்கித்தான் பார்ப்போமே...' என்று நுழைந்தது தான் இந்த சினிமா.

'காந்தா' படத்தில் எனது நடிப்பை பார்த்த பலரும் 'மகாநடி' படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த சாவித்திரி கதாபாத்திரத்தை நினைவூட்டுவதாக சொல்கிறார்கள். இரண்டு படங்களும் 1950-60 காலகட்டத்தைச் சேர்ந்தவை என்பதால் அந்த ஒப்பீடுகள் வந்திருக்கலாம்.

"கதாபாத்திரமாக மாறி கலக்கிவிடுவேன்"

ஒரே மாதிரியான கதைகளே எனக்கு வருவதாக சொல்கிறார்கள். அதாவது ஏன் பீரியட் கால படங்களில் நடிக்கிறீர்கள்? என்றும் கேட்கிறார்கள். நான் கதைகளை 'ஜானர்' அடிப்படையில் பார்க்கவே மாட்டேன். எனக்கு கதை தான் முதல் தேர்வு. ஒரு கதை எனக்கு பிடித்துவிட்டால், அந்த கதையை நான் விடவே மாட்டேன். என்னை பொறுத்தவரை இந்த கதாபாத்திரத்துக்கு நான் சரியாக இருப்பேன் என்ற நம்பிக்கை இயக்குனருக்கு வரவேண்டும். அது நடந்தாலே போதும், கதாபாத்திரமாக நான் மாறி கலக்கிவிடுவேன்.

தமிழ் புரிந்தாலும் அதை பேச கொஞ்சம் தடுமாறுகிறேன். அதேபோல தான் தெலுங்கு மொழியும் இருக்கிறது. இருந்தாலும் தமிழ், தெலுங்கு மொழிகளை கற்றுக்கொண்டு வருகிறேன். விரைவில் தென்னிந்திய மொழிகளிலும் பேச கற்றுக்கொள்வேன் என்று நம்புகிறேன். ஒரு நடிகையாக எனக்குள் தேடல்கள் நிறைய உண்டு.

"நினைத்ததை நடத்தி முடிப்பவள் நான்"

ஹீரோயினாக மட்டும் தான் நடிப்பேன் என்று சொல்லவே மாட்டேன். திறமையை நிரூபிக்கும், என்னை உலகறிய செய்யும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் துணிந்து நடிப்பேன். அந்தவகையில் என்னை தாக்கும் கதாபாத்திரங்களாக இருக்கும் பட்சத்தில் வில்லியாகவும் நடிப்பேன். சவாலான வேடங்களையே நான் எதிர்பார்க்கிறேன். எனக்கு என்னிடமே பிடித்தது என் பிடிவாதம் தான். கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து நினைத்ததை நடத்தி முடிப்பவள் நான்".

SCROLL FOR NEXT