'பாய் பிரண்ட்' என்ற மலையாள படத்தில் நடித்து கேரள மக்களின் கவனத்தை திருப்பிய ஹனிரோஸ், தமிழில் 'சிங்கம்புலி', 'கந்தர்வன்' படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடத்திலும் படங்கள் நடித்திருக்கிறார். கேரளாவில் எந்த பெரிய கடை திறப்பு நிகழ்ச்சியாக இருந்தாலும் அங்கு ஹனிரோசின் தரிசனம் உண்டு. அவர் அணியும் உடைகளை ரசிப்பதற்காகவே ரசிகர்கள் கூடுவதும் உண்டு.
தற்போது புதிய படங்களில் பிசியாக நடித்து வரும் ஹனிரோஸ், தனது திரைப்பயணம் பற்றி பகிர்கிறார். சினிமாவில் நான் நுழைந்தது எதிர்பாராதது. நடிக்க வந்த புதிதில் மலையாள படங்களில் தொடர்ச்சியாக நடித்தேன். தொடர்ந்து மலையாளத்திலேயே பிசியாக நடித்ததால் இதர மொழிகளில் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் தமிழில் ஓரிரு படங்கள் நடித்தது மகிழ்ச்சி.
கடைகள் திறப்பு விழாக்களுக்கு நான் அடிக்கடி செல்வது, ரசிகர்களின் அன்பை அருகேயிருந்து பெறவேண்டும் என்பதற்காகத்தான். எத்தனையோ பிரச்சினைகள் வந்தாலும் ரசிகர்களின் அன்பு தான் என்னை காப்பாற்றி கரை சேர்த்து வருகிறது. அவர்களுக்கு என்றென்றும் உண்மையாக இருக்க விரும்புகிறேன். பொதுவாகவே திரை பிரபலங்கள் மீது விமர்சனங்கள் எழுவது சகஜம்.
அதுவும் குறிப்பாக நடிகைகள் என்றால் சொல்லவே வேண்டாம். அப்படித்தான்... இப்படித்தான்... என்று முத்திரை குத்துவார்கள். எனக்கும் நிறைய விமர்சனங்கள் வந்தன. இந்த விமர்சனங்களுக் கெல்லாம் பதிலடி கொடுக்கவேண்டும், விளக்கம் தரவேண்டும் என்று நினைத்தால் இன்னும் பிரச்சினை தான் வரும். எனவே எதையுமே கண்டுகொள்ளாமல், நதிபோல சென்று கொண்டேயிருக்க வேண்டும்.
விரைவில் எனது நடிப்பில் புதிய படங்கள் வெளியாக உள்ளது. எனவே ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறேன். என்னை பொறுத்தவரை சினிமாவில் எனக்கு நான் தான் போட்டி. என்னுடைய வெற்றியும், தோல்வியும் என்னை சுற்றித்தான் உள்ளது. என்னை சம்பந்தப்படுத்தி தான் அவை அமைகிறது. எனவே இங்கு போட்டி என்றெல்லாம் யோசிக்காமல், நமது வாழ்க்கையை பார்த்து போய்க்கொண்டே இருக்கவேண்டும். உடைகள் விஷயத்தில் நான் மிகவும் கவனமாக இருப்பேன். எனக்கான உடைகளை தேர்வு செய்துதர தனியாக ஒரு குழுவும் வைத்துள்ளேன். ரசிகர்களை நான் என்றுமே ஏமாற்ற மாட்டேன்”. என்றார்.