சினிமா செய்திகள்

“எஸ்.ஆர். பிரபுவின் உதவியை மறக்க மாட்டேன்” - விஷால் நெகிழ்ச்சி பதிவு

தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு எனக்கு செய்த உதவியை நான் வாழ்நாளில் ஒருபோதும் மறக்க மாட்டேன் என விஷால் பதிவிட்டுள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நேற்று வெளியான படம் கருப்பு. சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான இந்த படம் பல போராட்டங்களுக்கு பிறகு நேற்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளிலேயே இந்த படம் ரூ.21 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில், நடிகர் விஷால் கருப்பு படக்குழுவினருக்கும், கருப்பு பட தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவுக்கும் வாழ்த்து தெரிவித்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அவர் வெளியிட்டுள்ள பதிவில் , 'கருப்பு' படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

குறிப்பாக, என் அன்பு நண்பர் எஸ்.ஆர். பிரபு அவர்களுக்கு; 'இரும்புத்திரை' திரைப்படம் மே 11-ஆம் தேதி வெளியாவதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர் அவரே. என் திரைப்படம் குறித்த நேரத்தில் வெளியாக வேண்டும் என்பதற்காக, அதிகாலை 7 மணிக்கே அவர் எனக்கு அளித்த உதவியை நான் வாழ்நாளில் ஒருபோதும் மறக்க மாட்டேன். இந்த மாபெரும் வெற்றிக்கு நீங்கள் முழுமையாகத் தகுதியானவர்; இதே உறுதியுடனும் நம்பிக்கையுடனும் தொடர்ந்து செயல்படுங்கள் நண்பரே! எங்களைப் போலவே நீங்களும் ஒரு மிகச்சிறந்த, வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்ந்து நிரூபிப்பீர்கள்.

இந்த வெற்றிக்கு மிகவும் தகுதியான நடிகர் சூர்யா அவர்களுக்கு என் வாழ்த்துகள். மேலும், என் அப்பன்களான கருப்பசாமிக்கும், வீரபத்திரசாமிக்கும் என் நன்றிகள். 'மார்க் ஆண்டனி' படத்தின் மூலம் என்னை மீண்டும் என் காலில் நிற்க வைப்பதற்காக நீங்கள் வெளிப்படுத்திய அந்தச் சக்தி அளப்பரியது. இந்தப் படத்தையும் நீங்கள் ஆசீர்வதித்ததற்கு நன்றி. பாடல் அல்லது சண்டைக் காட்சியைப் படமாக்கிக்கொண்டிருந்தபோது, ​​படப்பிடிப்பின் நடுவிலேயே நான் அருள் வந்து ஆடிய அந்தச் சம்பவத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. இப்படத்தின் இயக்குனர் மற்றும் ஒட்டுமொத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என் பாராட்டுகள். கொல்கத்தாவில் இப்படம் வெளியானால், அதை இங்கே காண ஆவலுடன் காத்திருக்கிறேன்; இல்லையெனில், நான் சென்னை திரும்பும் வரை அந்த ஆவல் என்னுள் அப்படியே நிறைந்திருக்கும். இறைவன் அருள்புரியட்டும். என்று தெரிவித்துள்ளார்.