சினிமா செய்திகள்

ஏஐ மூலம் பாடலில் ஆபாச காட்சி: யாரையும் விட மாட்டேன் - ஜூனியர் என்டிஆர்

‘தேவரா’ திரைப்படத்தின் பாடலில் ஏஐயை பயன்படுத்தி பெண்ணை கேவலமான முறையில் உருவாக்கி சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

ஏஐ-யின் தவறான பயன்பாட்டிற்கு எதிராக அனைத்து மாநில அரசுகளும், இந்திய அரசும் நடவடிக்கை எடுத்து, கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும் என்று நடிகர் ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார்.

ஜூனியர் என் டிஆர் நடிப்பில் உருவான ‘தேவரா’ திரைப்படம், கடந்தாண்டு திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், இப்படத்தில் இடம்பெற்ற சுட்டமல்லி பாடல் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்று ஹிட் அடித்தது. அப்பாடலில் நடிகை ஜான்வி கபூர் கவர்ச்சியாக நடன அசைவுகளைக் கொடுத்திருப்பார்.

இந்த நிலையில், இப்பாடலை ஏஐ மூலம் போலியாக சித்திரித்து உண்மையான பாடலில் இடம்பெறாத மோசமான ஆபாச காட்சிகளை உருவாக்கி சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனால், ஜூனியர் என்டிஆர் உள்பட படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து ஜூனியர் என்டிஆர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பெண்களைத் தாயாகவும் தெய்வமாகவும் மதிக்கும் நாட்டில், “மாத்ருதேவோ பவ” என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல; அது நமது கலாசாரத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கிறது. ஆனால், சிலர் கீழ்த்தரமாகச் சென்றுவிட்டார்கள். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒரு பெண்ணை மிகவும் கேவலமான முறையில் அவமதிக்கும் வகையில் உள்ளடக்கத்தை உருவாக்கியுள்ளனர். இவ்வளவு அருவருப்பானதை ஏஐ மூலம் உருவாக்குவது என்பது விவரிக்க முடியாத அளவுக்கு வெட்கக்கேடானது.

இந்தப் போலி சித்திரிப்பு சுட்டமல்லி பாடலின் வீடியோவின் பின்னணியில் இருப்பவர்களே, உங்களில் யாரையும் நான் விட்டுவைக்க மாட்டேன். இதை உருவாக்கியவர்கள் மட்டுமின்றி, இதை பரப்புபவர்கள் மீதும் சாத்தியமான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.தயவுசெய்து இதனைப் பார்க்கவோ, பகிரவோ அல்லது அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் எந்த விதத்திலும் ஈடுபடவோ வேண்டாம். இன்று, இது வேறு ஒருவருக்கு நடந்திருக்கலாம். நாளை அது உங்கள் தாயாகவோ, சகோதரியாகவோ, மனைவியாகவோ அல்லது மகளாகவோ இருக்கலாம்.

இது மிகவும் தீவிரமான பிரச்னை. ஏஐ-யின் தவறான பயன்பாட்டிற்கு எதிராக அனைத்து மாநில அரசுகளும், இந்திய அரசும் நடவடிக்கை எடுத்து, கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT