சினிமா செய்திகள்

கற்றுக்கொண்ட அனைத்தையும் ‘சேயோன்’ படத்திற்காக பயன்படுத்துவேன் - சந்தோஷ் நாராயணன்

கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் "சேயோன்" படத்தினை சிவகுமார் முருகேசன் இயக்கி வருகிறார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தற்போது தனது 26-வது திரைப்படமான ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இந்த படம், வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை கமல் ஹாசன் தயாரிக்க, இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்சே நடிக்கிறார். பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ‘சேயோன்’ படம் மற்றும் சிவகார்த்திகேயன் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “‘சேயோன்’ படம் என்பது எனது தனிப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடாக அமையும். இதை ஒரு வேலையாக மட்டும் கருதவில்லை. நான் கற்றுக்கொண்ட அனைத்தையும் பயன்படுத்தி, இதில் எனது மிகச்சிறந்த பங்களிப்பை வழங்க விரும்புகிறேன். இப்படம் ரசிகர்களை மிகச் சிறப்பாக மகிழ்விக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

மேலும், சிவகார்த்திகேயன் குறித்து பேசிய அவர், “அந்த காலகட்டத்தில் சிவா மிகவும் சிரமப்பட்டார். தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வருவது மிகவும் கடினம். ஆனால் அந்தத் தடைகளை உடைத்து வெற்றிகரமாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்” என தெரிவித்தார்.

தொடர்ந்து, “நாங்கள் இருவருமே உணர்ச்சிபூர்வமாகவும் வெளிப்படையாகவும் பேசக்கூடியவர்கள். எங்களுக்குப் பின்னணியாக யாரும் இல்லை. சிவாவைப் பற்றி நான் மிகுந்த பெருமை கொள்கிறேன். அவர் இப்போது மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்து நிற்கிறார்” என்று சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.