சினிமா செய்திகள்

“நடிப்பு யுக்திகளை கற்றுக்கொள்ள ஆசை” – தென்னிந்திய சினிமா குறித்து சாரா அலிகான் பேட்டி

ஒரு நடிகையாக பிற மொழி படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது என சாரா அலிகான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சயீப் அலிகானின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்து பிரபலமானவர், சாரா அலிகான். இந்தி சினிமாவின் முக்கிய நடிகையாக திகழும் இவர், கேதார்நாத் படத்தின் சினிமாவில் இளம் நடிகையாக அறிமுகமானார். குறிப்பாக தனுஷ் ஜோடியாக நடித்த 'அத்ராங்கி ரே' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் தென்னிந்திய சினிமா குறித்து பேசிய சாரா அலிகான் கூறியதாவது: “பாலிவுட் சினிமாதான் எனக்கு எல்லாமே. எனக்கான புகழும், பெருமையும் இங்கிருந்துதான் கிடைத்தது. அதே நேரத்தில், ஒரு நடிகையாக பிற மொழி படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. குறிப்பாக தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன். அங்குள்ள நடிப்பு யுக்திகளையும் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். இந்திய சினிமாவில் பாலிவுட்டிற்கு அடுத்ததாக தென்னிந்திய சினிமா மீது எனக்கு தனி ஈர்ப்பு உள்ளது” என்றார். சாரா அலிகானின் இந்த கருத்து தற்போது தென்னிந்திய ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.