சினிமா செய்திகள்

"கலகலப்பான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை!" - நடிகை லிசி ஆண்டனி

சமீபத்தில் வெளியான 'கட்டா குஸ்தி-2' திரைப்படத்தில் நடிகை லிசி ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

'நான் நக்கல், நய்யாண்டி புடிச்ச ஆளு' - கலகலப்பான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை -லிசி ஆண்டனி

'தூங்காநகரம்', 'பரியேறும் பெருமாள்', 'கட்டா குஸ்தி', 'புளூ ஸ்டார்', 'பொம்மை நாயகி' உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பால் கவனம் பெற்றவர் நடிகை லிசி ஆண்டனி. சமீபத்தில் வெளியான 'கட்டா குஸ்தி-2' திரைப்படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட கணவரின் அடக்குமுறையை எதிர்த்து, ஊராட்சி மன்றத் தலைவராக தன்னம்பிக்கையுடன் உயர்ந்து நிற்கும் அவரது கதாபாத்திரம் பாராட்டுகளை குவித்து வருகிறது. தற்போது 'லட்சுமி காந்தன் கொலை வழக்கு', 'வேட்டுவம்' உள்ளிட்ட படங்களில் லிசி ஆண்டனி நடித்து வருகிறார்.

15 ஆண்டுகள்... மேடு பள்ளங்களை கடந்த பயணம்

இதுகுறித்து லிசி ஆண்டனி கூறியதாவது: "15 ஆண்டுகால திரைப்பயணத்தில் ஏராளமான மேடு, பள்ளங்களை சந்தித்திருக்கிறேன். கடின உழைப்பு, விடாமுயற்சி, பொறுமை ஆகிய மூன்றுமே இன்று நான் இருக்கும் இடத்துக்கு என்னை கொண்டு வந்துள்ளன. இதுவரை வலி, போராட்டம் நிறைந்த பல கதாபாத்திரங்கள் எனக்கு கிடைத்துள்ளன. இருந்தாலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் முழு மனதுடன் ரசித்து நடித்திருக்கிறேன்."

"என்னுடைய இயல்பான கலகலப்பை ரசிகர்கள் பார்க்க வேண்டும்"

தொடர்ந்து அவர் கூறுகையில், "உண்மையில் நான் நக்கல், நய்யாண்டி நிறைந்த கலகலப்பான மனிதர். நான் இருக்கும் இடமே உற்சாகமாக இருக்கும் என்று என்னைச் சுற்றியுள்ளவர்கள் சொல்வார்கள். ஆனால், திரைப்படங்களில் என் இயல்புக்கு மாறான சோகமும், வலியும் நிறைந்த கதாபாத்திரங்களே அதிகமாக அமைந்துள்ளன. இனி என்னுடைய உண்மையான கலகலப்பான முகத்தை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பது என் விருப்பம். அந்த வாய்ப்பை இறைவன் நிச்சயம் வழங்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்.