சென்னை,
விஜய் டெலிவிஷனில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் தனது பழைய வாழ்க்கை அனுபவம் ஒன்றை அவர் பகிர்ந்துகொண்டார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. வித்தியாசமான கதாபாத்திரங்கள், எதார்த்தமான நடிப்பு என ரசிகர்களிடம் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள இவர், 'மக்கள் செல்வன்' என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது விஜய் டெலிவிஷனில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் தனது பழைய வாழ்க்கை அனுபவம் ஒன்றை அவர் பகிர்ந்துகொண்டார். துபாயில் வேலை பார்த்த காலத்தில் குடும்பத்துக்கு பணம் அனுப்புவதற்காக உணவுச் செலவைக்கூட குறைத்துக்கொண்டு வாழ்ந்ததாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "துபாயில் வேலை பார்த்தபோது மாதம் ரூ.10 ஆயிரம் வீட்டுக்கு அனுப்ப வேண்டியிருந்தது. தினமும் சாப்பிட்டால் பணம் அனுப்ப முடியாது என்பதால், காலையில் டீயும், மதியம் ஜூஸும் மட்டுமே குடிப்பேன்.
மாலையில் கோயிலுக்குச் சென்றால் பிரெட், சென்னா கொடுப்பார்கள். வெள்ளிக்கிழமைகளில் குருத்வாராவில் தயிர் சாதம், சாம்பார் சாதம் வழங்குவார்கள். இதற்காகவே கோயிலுக்குச் செல்வேன்" என்று தனது பழைய அனுபவத்தை நினைவுகூர்ந்தார்.
வாழ்க்கையில் பல சவால்களைக் கடந்து திரையுலகில் சாதித்த விஜய் சேதுபதி, தற்போது இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 'பாக்கெட் நாவல்' படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் 'இஞ்சி வெல்லம்' படத்திலும் நடித்து வருகிறார். அவரது பழைய வாழ்க்கைப் போராட்டம் குறித்த இந்தப் பகிர்வு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.