சென்னை,
தர்மன் படப்பிடிப்பின்போது ரஜினிகாந்திடம் நிறைய பேசுகிறேன். அவர் எனக்கு ஒரு நல்ல நண்பரைப் போல மாறிவிட்டார். அடிக்கடி அவரிடம் நிறைய கேள்விகளைக் கேட்டு தொந்தரவு செய்வேன். என நடிகை ராஷி கன்னா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷி கன்னா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் ராஷி கன்னா, சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறார்.
தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தில் ராஷி கன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தை இளம் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.
மருத்துவர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாகக் கூறப்படும் இப்படத்தில் சிம்ரன், யோகி பாபு, ராஷி கன்னா, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 'தர்மன்' படப்பிடிப்பு அனுபவம் குறித்து ராஷி கன்னா சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், "தர்மன் படப்பிடிப்பின்போது ரஜினிகாந்திடம் நிறைய பேசுகிறேன். அவர் எனக்கு ஒரு நல்ல நண்பரைப் போல மாறிவிட்டார். அடிக்கடி அவரிடம் நிறைய கேள்விகளைக் கேட்டு தொந்தரவு செய்வேன். இருப்பினும், என்னுடைய அனைத்து கேள்விகளுக்கும் அவர் மிகவும் பொறுமையாகப் பதிலளிப்பார்.
அவர் அருகில் இருக்கும்போது நான் ஒரு குழந்தையைப் போல உணர்கிறேன். தர்மன் படப்பிடிப்புத் தளத்தில் இருப்பதை மிகவும் ரசித்து வருகிறேன். ஒரு சாதாரண ரசிகையைப் போல நானும் தர்மன் படத்தைத் திரையில் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்" என்றார். ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பது குறித்த தனது மகிழ்ச்சியையும், படப்பிடிப்புத் தளத்தில் கிடைக்கும் அனுபவங்களையும் ராஷி கன்னா பகிர்ந்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.