சினிமா செய்திகள்

“வாய்ப்பு கிடைத்தால் பிரதமரை மாற்றிவிடுவேன்”- நடிகர் கிஷோர் பரபரப்பு கருத்து

நடிகர் கிஷோர் பிரதமர் குறித்து தெரிவித்த கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

2007-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர் நடிகர் கிஷோர். இத்திரைப்படத்தினை தொடர்ந்து ஜெயம் கொண்டான், வெண்ணிலா கபடிக்குழு, விடுதலை, வேட்டையன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் படித்து பிரபலமானர்.

கிஷோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘மெல்லிசை’. இயக்குநர் தீரவ் இயக்கியுள்ள இந்த படம், அப்பா–மகள் இடையேயான உறவை மையமாகக் கொண்ட கதையமைப்பில் உருவாகி, கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் கிஷோர் பிரதமர் குறித்து தெரிவித்த கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த பேட்டியில் அவர், "வாழ்க்கையில் பின்னால் போகும் வாய்ப்பு இருந்தால் 2014ம் ஆண்டுக்கு சென்று பிரதமரை மாற்றிவிடுவேன். இந்தியாவே மாறியிருக்கும். நாடு இப்போது ஆபத்தான நிலைமையில் இருக்கிறது. வெறுப்புணர்வு அதிகம் இருக்கிறது. இப்படியே போனால் இதை மாற்றுவதற்கு பல வருடங்கள் ஆகிவிடும். வெறுப்புணர்வை முதலீடாக வைத்து ஆட்சிக்கு வருபவர்கள் ரொம்ப ஆபத்தானவர்கள். அன்பு இல்லை என்றால் இங்கே எதுவுமே இருக்காது" என்று கூறியுள்ளார்.

இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன.