சென்னை,
அம்மாவாக நடிப்பதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ரவி தேஜா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘இருமுடி’. இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கியுள்ள இப்படத்தில் பிரியா பவானி சங்கர், ரவி தேஜாவின் மனைவியாகவும், குழந்தைக்கு தாயாகவும் நடித்துள்ளார்.
வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் ‘இருமுடி’, வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. இப்படம் வெளியான 4 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், ‘இருமுடி’ திரைப்படம் தொடர்பான பேட்டி ஒன்றில் பேசிய பிரியா பவானி சங்கர், தாயாக நடித்தது குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
அவர் பேசுகையில், “ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதில் எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. எனக்கு 20 வயதில் திருமணம் ஆகியிருந்தால், குழந்தை இருந்திருக்கும். அதனால் அம்மாவாக நடிப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த கதையை முதன்முதலில் கேட்டபோதே மிகவும் இன்டென்ஸாகவும், ஆன்மாவை தொடும் வகையிலும் இருந்தது. இயக்குநர் ஸ்கிரிப்ட்டை கொடுக்கும்போதே கதை எந்த திசையில் செல்லப் போகிறது என்பது எனக்கு தெளிவாக தெரிந்தது” என்றார்.