சினிமா செய்திகள்

நான் நடந்தால், பேசினாலே சாதனை - சிம்பொனி இசைநிகழ்ச்சியில் இளையராஜா பேச்சு

தனது இசையுலக சாதனையில் 50-வது ஆண்டு பொன்விழாவை எட்டியிருக்கும் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை கச்சேரி 2 நாட்கள் நடைபெற்றது.

1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார். அன்று முதல் இன்று வரை இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை. தனது தனித்துவமான இசையினால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.

இவர் கடந்த 2025ம் ஆண்டு லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் வேலியன்ட் என்னும் தலைப்பில் தனது சிம்பொனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினார். அதனை தொடர்ந்து புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து துபாயில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தினார்.

முதல் நாள் பல வெளி நாட்டு இசை கலைஞர்கள் பங்கேற்று ‘வேலியன்ட்’ சிம்பொனி நிகழ்ச்சியை நடத்தினர். 2-ம் நாள் தனது முத்திரை பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். வழக்கம் போல் தனது முதல் பாடலான ‘ஜனனி ஜனனி’, ‘அமுதே தமிழே’ என்று ஆரம்பித்து, இறுதி பாடலாக ‘என் ஜோடி மஞ்ச குருவி’ பாடலை பாடி முடித்தார்.

இந்நிகழ்ச்சியில் கங்கை அமரன், தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், மாரி செல்வராஜ், ஜெயம் ராஜா, பிரதீப் ரங்கநாதன், ராதிகா சரத்குமார், நிரோஷா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, தேவிஸ்ரீபிரசாத், நாசர், பார்த்திபன், ஆர். வி.உதயகுமார், கார்த்திக் சுப்புராஜ், தேவயானி ராஜகுமாரன், சுதா கொங்கரா, சாரங், தியாகு ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் இடம் பெற்ற ‘இதயம் போகுதே’ பாடல் உருவானது பற்றியும், அதில் பயன்படுத்தப்பட்ட சிம்பொனி குறித்தும் இளையராஜா பேசினார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘வேலியண்ட்’ சிம்பொனி இசைநிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, “நம் இசையையும் சிம்பொனியையும் இணைத்தது இசை உலக சரித்திரத்தில் மிகப்பெரிய சாதனை. நான் சாதனைகளுக்காகவோ, விருதுகளுக்காகவோ காத்திருப்பவன் அல்ல. நான் நடந்தாலும், பேசினாலே சாதனைதான்” என்று தன்னம்பிக்கையுடன் கூறினார். அவரது இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

நிகழ்ச்சியின் நடுவே இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கி இளையராஜா இசையமைக்கும் ‘மஞ்சனத்தி’ என்ற படத்தின் தலைப்பு தோற்றம் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக முதல்-அமைச்சர் விஜய் தாயார் ஷோபா சந்திரசேகர் பாடிய போது அரங்கத்தில் ரசிகர்கள் உற்சாகத்தில் விசில் ஊதி ஆரவாரம் செய்தனர்.