சினிமா செய்திகள்

மக்கள் முதல்-அமைச்சரை தேர்ந்தெடுத்தால் அவருக்கு ஆதரவளிப்பது எனது கடமை - நடிகர் மாதவன்

தான் எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை என்று நடிகர் மாதவன் கூறியுள்ளார்.

நடிகர் மாதவன் தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து பேசியுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். மாதவன் இந்தியில் வெளியான ‘சைத்தான்’ படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் ஜோதிகாவுடன் நடித்துள்ளார். மாதவன் கங்கனா ரணாவத்துடன் இணைந்து இரண்டு இந்தி படங்களில் நடித்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக வைத்து ‘ராக்கெட்டரி’ படத்தை மாதவன் இயக்கியிருந்தார். மறைந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் மாதவன் நடித்துள்ளார்.

ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்த மாதவன் தற்போது இந்தியாவின் எடிசன் என அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் புதிய படத்தில் ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘ஓஹோ எந்தன் பேபி’ பட இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்கியுள்ள ‘ஜி.டி.என்’ படத்தில் ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி, யோகி பாபு மற்றும் துஷாரா விஜயன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் தொடர்பான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. போஸ்டரில் அடையாளம் தெரியாத அளவுக்கு வயதான தோற்றத்துடன் ஜி.டி.நாயுடுவின் உருவத்தை பிரதிபலிக்கும் வகையில் மாதவன் காணப்பட்டார்.

‘ஜி.டி.என்’ படத்தை வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன் மற்றும் மாதவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.‘ஜி.டி.என்’ படத்தின் ‘தி ரைஸ் ஆப் ஜிடிஎன்’ எனும் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது. ஏற்கெனவே, இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னட மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் மாதவன், “நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவாளன் இல்லை. அரசியலுக்கு வரும் எண்ணமும் இல்லை. அரசியல் என்பதை மிக பொறுப்பான விஷயமாகப் பார்க்கிறேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதை எப்போதும் நினைத்திருக்க வேண்டும். யாராவது நல்ல காரியங்களைச் செய்தால் அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கிறேன். நம் நாட்டின் மக்கள் முதலமைச்சராகவோ அல்லது பிரதமராகவோ யாரையாவது தேர்ந்தெடுத்தால், அவருக்கு ஆதரவளிப்பது எனது கடமை என நினைக்கிறேன். எனது முடிவுகளை இந்த விமர்சனங்கள் பாதிப்பதில்லை. இதைக் கொண்டு என்னைக் காயப்படுத்த முயன்றால், அவர்களின் உண்மையான நோக்கம் என்னவென்று கேள்வி கேட்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

ஆதித்யா தர் இயக்கத்தில் கடந்த 2025-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘துரந்தர்’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு வெளியானது. படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 2 பாகங்களும் சேர்த்து ரூ.3000 கோடி வரை வசூலித்தது.

‘துரந்தர்’ படத்தில் நடித்த பின்பு, நடிகர் மாதவன் ‘சங்கி’ என முத்திரை குத்தப்பட்டார். அவர் அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் வெளியாகின. மேலும், பிரச்சாரப் படங்களில் நடிப்பதாகவும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதற்கு விளக்கம் அளித்து அண்மையில் அவர் கொடுத்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.