சினிமா செய்திகள்

உங்களுக்கு நடந்த அநீதியை நீங்களே சொல்லத் தயங்கினால் யார்தான் சொல்வார்கள்? இயக்குநர் அமீர்

‘ஜன நாயகன்’ படத்தின் இயக்குநர் வினோத் சொல்லும் கருத்து ஏற்புடையது இல்லை என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இயக்குநரும் நடிகருமான அமீர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர்கள் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் உள்ள சிக்கல்களை சொல்லத் தெரியவில்லை. அதில் உள்ள சிக்கல்களை, உண்மைகளை சொல்ல தைரியம் இல்லை' என அப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் சொல்லி உள்ளது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமீர், “ஒரு இயக்குநர் இப்படி சொல்லி இருக்கிறாரா? என்பதை நான் ரொம்ப வருத்தமாக பார்க்கிறேன். நான் அந்த செய்தியை பார்க்கவில்லை. ஆனால் நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அப்படியெல்லாம் சொல்ல முடியாது. நீங்கள் இந்த சமூகத்தில் இன்றைக்கு உங்களுக்கு கண்களுக்கு தெரிந்த ஒரு விஷயத்தை, உங்கள் கண்களுக்கு முன்னால் நடக்கக்கூடிய அநீதியை நீங்கள் சொல்லத் தயங்கினால் பின்னர் யார் தான் சொல்வார்? ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் நாயகனாக இருக்கக்கூடியவர் ஒரு மாநிலத்தின் முதல்வராகிவிட்டார். அப்படி இருக்கும்போது உங்கள் படத்தில் என்ன நடந்தது என்று நீங்கள் சொல்லுங்கள்.

யார் தப்பு செய்தார்கள் என்று நமக்கு தெரிய வேண்டும் அல்லவா? ஏன் குறிப்பாக இதை நான் சொல்கிறேன் என்றால் ‘ஜன நாயகன்’ திருட்டுத்தனமாக வெளியான போது இன்றைக்கு அமைச்சராக இருக்கக்கூடிய ஆதவ் அர்ஜுனா ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார். ஒன்றிய அமைச்சராக இருக்க கூடிய எல்.முருகனும் இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலினும் சேர்ந்து வெளியிட்டார்கள் என்று ஒரு பிரச்சாரத்தில் சொல்லி கடந்துவிட்டார். அதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அது ஒரு தேர்தல் பிரச்சாரத்திற்கான உத்தியாகத்தான் பார்க்க முடிந்ததே தவிர, உண்மை தன்மை இருக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. அது ஒரு பொய் தகவல் தான். பொய் தகவல் தகவலாக இருப்பதால் தான் இன்றைக்கு வரை அதை நீங்கள் நிரூபிக்க முடியவில்லை. அப்படி இருக்கும்போது என்ன நடந்தது என்று இயக்குநர் சொல்ல மறுத்தால் பின்னர் யார் தான் சொல்வார்.

ஒன்று சம்பந்தப்பட்டவர்கள் சொல்ல வேண்டும் யார் தடுக்கிறார்கள் என்று, அவர்களும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். அடித்தவனும் சொல்லமாட்டேன் என்றால் அடி வாங்கியவனும் சொல்ல மாட்டேன் என்றால் நாம் எப்படி தெரிந்து கொள்வது. நாம் எந்த நிலைப்பாட்டை எடுப்பது. ஒரு பாதிக்கப்பட்டவர் தனக்கு நடந்த அநீதையை பொது வெளியில் சொன்னால் தானே நான் கேட்க முடியும். எனவே ‘ஜன நாயகன்’ படத்தின் இயக்குநர் சொல்லும் கருத்து ஏற்புடையது இல்லை'' என்றார்.

இயக்குநர் வினோத் நேர்காணல் ஒன்றில் அவரிடம் ‘ஜன நாயகன்’ ரிலீஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அது என் கைகளில் இல்லை. அந்த விவகாரத்தில் உள்ளிருக்கும் உண்மைகளை சொல்லும் தைரியம் எனக்கு இல்லை. அதை சொல்லும் தைரியம் எனக்கு வந்தாலும், அதை போடும் தைரியம் உங்களுக்கு (ஊடகங்களுக்கு) இல்லை. அதனால் படம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்” என்று கூறியிருந்தார்.