சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் த.வெ.க.வுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை.
இதையடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், விஜய்யுடன் ‘பிரண்ட்ஸ்’ திரைப்படத்தில் நடித்தவரான நடிகை விஜயலட்சுமி, தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
“விஜய் அண்ணா, உங்களுக்கு அட்வைஸ் கூறுகிறேன் என்று நினைக்க வேண்டாம், எனது கருத்தை சொல்கிறேன். ஆட்சியமைப்பதற்கு உங்களுக்கு திராவிட கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டால், தயங்காமல் அவர்களிடம் கேளுங்கள்.
த.வெ.க. ஆட்சியமைக்க இடையூறு செய்ய மாட்டோம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். தி.மு.க., அல்லது அ.தி.மு.க.வின் உதவி தேவைப்பட்டாமல் கேளுங்கள். உங்களுக்கு தமிழ்நாட்டில் யாருமே எதிரி கிடையாது. நீங்கள் நன்றாக வர வேண்டும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள்.
நீங்கள் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்துவிட்டீர்கள். மக்களும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் முதல்-அமைச்சராக வர வேண்டும் என்று நாங்கள் எல்லோருமே காத்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் யாரும் நமக்கு எதிரி இல்லை. எல்லோரையும் ஒரு குடும்பமாக நினைத்து முன்னேறிச் செல்லுங்கள். இவ்வளவு தூரம் வந்து விட்டுக் கொடுத்துவிடாதீர்கள். ஜெயித்துவிடுங்கள் விஜய் அண்ணா, வாழ்த்துகள்”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.