சினிமா செய்திகள்

ஏ.ஐ. டீப்பேக் தொழில்நுட்பத்தால் பாதிப்பு... அமித் ஷாவிடம் சிரஞ்சீவி, ராம் சரண் புகார்

ஏ.ஐ. மற்றும் டீப்பேக் தொழில்நுட்பங்களின் தவறான பயன்பாட்டைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அமித் ஷாவிடம் வலியுறுத்தினர்.

ஐதராபாத்,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் ஆகியோர், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளனர்.

அமித் ஷாவுடன் சந்திப்பு

ஐதராபாத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, சிரஞ்சீவியும், ராம் சரணும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை வரவேற்று கவுரவித்தனர். அவருக்கு பொன்னாடை அணிவித்ததுடன், சிலை மற்றும் பூங்கொத்தும் வழங்கினர். அப்போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் உருவங்களை தவறாக சித்தரிக்கும் டீப்பேக் வீடியோக்கள் அதிகரித்து வருவது குறித்து இருவரும் தங்களது கவலையை தெரிவித்தனர்.

டீப்பேக் வீடியோக்களால் பாதிப்பு

குறிப்பாக, நடிகர்கள் மற்றும் பொதுப் பிரமுகர்களின் அனுமதியின்றி அவர்களது புகைப்படங்கள், குரல் மற்றும் உருவங்களைப் பயன்படுத்தி போலியான வீடியோக்கள் உருவாக்கப்படுகின்றன. இதுபோன்ற வீடியோக்கள் சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட கவுரவத்தையும் நற்பெயரையும் பாதிப்பதுடன், திரையுலகினருக்கும் பெண்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

எனவே, ஏ.ஐ. மற்றும் டீப்பேக் தொழில்நுட்பங்களின் தவறான பயன்பாட்டைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அமித் ஷாவிடம் வலியுறுத்தினர்.

நடவடிக்கை எடுக்க அமித் ஷா உறுதி

சிரஞ்சீவி மற்றும் ராம் சரணின் கோரிக்கைகளைக் கேட்ட அமித் ஷா, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கான பாதுகாப்பு விதிமுறைகள் குறித்தும் மத்திய அரசு பரிசீலிக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக விரிவான கோரிக்கைகள் அடங்கிய எழுத்துப்பூர்வ மனுவை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நடிகர்களின் உருவங்களையும் அடையாளங்களையும் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க சிரஞ்சீவியும் ராம் சரணும் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி தெலுங்கு திரையுலகில் கவனம் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT