சினிமா செய்திகள்

நடிகை ரகுல் பிரீத்சிங் வீட்டில் வருமான வரித்துறை சோதனை: காரணம் என்ன?

வருமான வரித்துறையினர் மும்பையில் நடிகை ரகுல் பிரீத்சிங்கிற்கு தொடர்புடைய 12 இடங்களில் திடீர் சோதனை நடத்தினர்.

மும்பை,

சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் ரகுல் பிரீத்சிங்கிற்கு தொடர்பு இருக்கிறதா? சினிமா தயாரிப்பு என்ற பெயரில் சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் நிதி முறைகேடு நடந்ததா? என்ற கோணத்திலும் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.

நடிகை ரகுல் பிரீத்சிங்

தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ரகுல் பிரீத்சிங். தமிழில் தடையற தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், அயலான், இந்தியன்-2 உள்பட படங்களில் நடித்து உள்ளார். இவர் இந்திப்பட தயாரிப்பாளர் வாசு பக்னானின் மகன் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்து உள்ளார்.

12 இடங்களில் திடீர் சோதனை

இந்த நிலையில் நேற்று முன்தினம் வருமான வரித்துறையினர் மும்பையில் நடிகை ரகுல் பிரீத்சிங், அவரது மாமனார் வாசு பக்னானி மற்றும் அவருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனமான பேனோரமா ஸ்டூடியோவுடன் தொடர்புடைய 12 இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். திரைப்படங்களுக்கான முதலீடுகள், வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட சந்தேகத்திற்கிடமான நிதியுதவிகள் சார்ந்து இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 2021-22-ம் ஆண்டுகளில் தெலுங்கு திரையுலகை உலுக்கிய போதைப்பொருள் விவகாரத்தில் அமலாக்கத்துறையால் நடிகை ரகுல் பிரீத்சிங்கிடம் வாக்குமூலம் பெறப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு இறுதியில் ரகுல் பிரீத்சிங் சகோதரர் அமன் மீது மும்பை போதைப்போருள் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா?

இதன் பின்னணியில் சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் ரகுல் பிரீத்சிங்கிற்கு தொடர்பு இருக்கிறதா? சினிமா தயாரிப்பு என்ற பெயரில் சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் நிதி முறைகேடு நடந்ததா? என்ற கோணத்திலும் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த திடீர் சோதனை இந்திய திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT