சென்னை,
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ‘இந்தியன் 3’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் ‘War Mode’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘இந்தியன் 3’ திரைப்படம் மீண்டும் வேகமெடுக்க உள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இந்தியன்’. மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இப்படம், கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவானது.
‘இந்தியன் 2’ திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியானது. கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், படம் எதிர்பார்த்த அளவிலான வெற்றியைப் பெறவில்லை. அதேநேரத்தில், ‘இந்தியன் 2’ படத்துடன் வெளியான ‘இந்தியன் 3’ படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.
‘இந்தியன் 2’ படத்தின் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையில், ‘இந்தியன் 3’ படத்துக்காக மேற்கொண்டு செலவு செய்ய தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் தயக்கம் காட்டுவதாகவும், இதனால் படத்தை கைவிடும் திட்டத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டிருந்தபோதிலும், படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு தொடர்பான பல்வேறு பிரச்சினைகளால் பணிகள் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், லைகா புரொடக்ஷன்ஸ், இயக்குநர் ஷங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோருக்கு இடையே ஒருமித்த முடிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து ‘இந்தியன் 3’ படத்தின் பணிகளை மீண்டும் முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ‘இந்தியன் 3’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் ‘War Mode’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘இந்தியன் 3’ திரைப்படம் மீண்டும் வேகமெடுக்க உள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இப்படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘இந்தியன் 3’ திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.