சென்னை,
திவ்யா சத்யராஜுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிக்க பயில்வான் ரங்கநாதனுக்கு தடை விதிக்கிறேன். திவ்யாவுக்கு எதிரான ஆட்சேபகரமான கருத்துக்களை யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒளிபரப்பக்கூடாது" என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளரும், நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் அளித்த பேட்டி ஒன்றில், திருமணம் செய்து கொண்டதற்காக மட்டும் ஒரு ஜோடி சேர்ந்து வாழ்வதில்லை. காதல் காரணமாகவே ஒன்றாக வாழ்கின்றனர். மதம், ஜாதகம் அடிப்படையிலான திருமணங்களில் எனக்கு நம்பிக்கையில்லை என்று கூறியிருந்தார்.
இந்த பேட்டி தொடர்பாக, நடிகர் பயில்வான் ரங்கநாதன், தன்னை அவதூறாக விமர்சித்து யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளதாகக் கூறி, அவரிடம் ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் திவ்யா வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மேலும், தன்னைப் பற்றி அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க பயில்வான் ரங்கநாதனுக்கு தடை விதிக்க வேண்டும். தனக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தொடர்ந்து ஒளிபரப்ப கூகுள், பேஸ்புக், எக்ஸ் தளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, "திவ்யா சத்யராஜுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிக்க பயில்வான் ரங்கநாதனுக்கு தடை விதிக்கிறேன். திவ்யாவுக்கு எதிரான ஆட்சேபகரமான கருத்துக்களை யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒளிபரப்பக்கூடாது" என்று உத்தரவிட்டுள்ளார்.