சினிமா செய்திகள்

'விதி' படத்தில் சுஜாதா கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்டு சட்டம் படித்தேன்: ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு

'விதி' திரைப்படத்தில் நடிகை சுஜாதாவின் கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்டு, சட்டம் படித்து வக்கீல் ஆனேன் என்று நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, அவருக்கு சென்னை ஐகோர்ட்டில் நேற்று வழியனுப்பு விழா நடத்தப்பட்டது. அப்போது, நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா வழங்கிய தீர்ப்புகள் குறித்து புகழ்ந்து அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் பேசினார்.

அப்போது அவர், "நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைக்காக பெண் சிங்கமாக போராடியவர். கடந்த 5 ஆண்டுகளாக ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, 28 ஆயிரத்து 934 வழக்குகளில் தீர்ப்பளித்து உள்ளார். ஐகோர்ட்டின் முதல் பெண் தபேதாரை தனக்காக நியமித்துக்கொண்டதும் இவர்தான்" என்றார்.

பின்னர் நன்றி தெரிவித்து ஏற்புரையாற்றிய நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, “அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்ற நான், 'விதி' திரைப்படத்தில் நடிகை சுஜாதாவின் கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்டு, சட்டம் படித்து வக்கீல் ஆனேன். நீதிபதியாக இருப்பது எளிதல்ல. ராஜ்ஜியங்கள் வீழலாம். நீதிமன்றங்கள் நீடித்து நிலைக்கும். இந்த நிரந்தரமான நீதிமன்றங்களின் தற்காலிக நிர்வாகிகளே நீதிபதிகள்" என்று பேசினார். நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா பணி ஓய்வு பெறுவதை அடுத்து ஐகோர்ட்டு நீதிபதிகள் எண்ணிக்கை 52 ஆக குறைகிறது. காலியிடங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்கிறது.