சென்னை,
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் "அரசன்" படத்திலிருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகியதாகச் செய்திகள் வெளியாகின. இதற்கு தயாரிப்பாளர் தாணு பதிலளித்துள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் (எஸ்.டி.ஆர்.) நடித்து வரும் திரைப்படம் 'அரசன்'. வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ஆண்ட்ரியா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரக்கனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 'அரசன்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. அந்த வீடியோவில் 'பயர்' என்ற கானா பாடல் இடம்பெற்றுள்ளது. இதில் சிம்புவின் கதாபாத்திரத்திற்கு 'தாஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று இணையத்தில் வைரலானது. மேலும், 'அரசன் வேர்ல்டு' கிளிம்ப்ஸ் வீடியோ விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் "அரசன்" படத்திலிருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகியதாகச் செய்திகள் வெளியாகின. இதற்கு தயாரிப்பாளர் தாணு பதிலளித்துள்ளார்.
அதாவது, 'அரிகொம்பன்' திரைப்படத்தின் யானை மாதிரியைத் தமிழகம் முழுவதும் சுற்றி வரும் நிகழ்வைத் தொடங்கி வைத்த தயாரிப்பாளர் தாணு, செய்தியாளர்களிடம் பேசியபோது, "யூகங்களுக்கும், கற்பனைகளுக்கும் பதிலளிக்க முடியாது. விரைவில், அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அவைத் தொடங்கப்படும்போது அனைவரும் அறிந்துகொள்வார்கள்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், 'அரசன்' படத்தின் முன்னோட்டக் காட்சி விமர்சனங்களைச் சந்தித்தது குறித்த கேள்விக்கு, அதே வீடியோ யூடியூபில் அந்த வீடியோ அதிக பார்வைகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.