சினிமா செய்திகள்

’தலைவர் 173’ படத்தில் ரஜினிக்கு மகனாக நடிக்கும் பாசில் ஜோசப்?

ரஜினியின் ’தலைவர் 173’ படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

சென்னை,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அடுத்தடுத்த படங்களைச் சுற்றி ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயிலர் 2’ படத்தின் பணிகளை முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக தனது 173-வது படத்தில் நடிக்க உள்ளார்.

தற்காலிகமாக ‘தலைவர் 173’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் இந்த படம் ‘ஓ மை கடவுளே’ புகழ் அஷ்வத் மாரிமுத்துவின் கைக்கு மாறும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும், பிரபல இயக்குநர் ஷங்கர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், மலையாள நடிகர் பாசில் ஜோசப் சமீபத்தில் “ஒரு பெரிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளேன், ஆனால் தற்போது அதன் விவரங்களை தெரிவிக்க முடியாது” என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் ‘தலைவர் 173’ படத்தில் ரஜினிகாந்தின் மகனாக நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ஆனால், இதுகுறித்து படக்குழுவின் தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.