சென்னை,
மதிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள சூர்யாவின் 49-வது படம் கடலோரப் பின்னணியில் அமைந்த கதைக்களத்தைக் கொண்டிருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, ‘கருப்பு’, ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, தற்போது ‘சீன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் கவனம் பெற்ற ‘ரோமாஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இப்படத்தை இயக்கியுள்ளார். சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நஸ்ரியா நசீம், நஸ்லென், ஆனந்த்ராஜ், லால், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. அதிரடி, நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், காவல் துணைக் கண்காணிப்பாளர் இன்பராஜ் பாண்டியன் ஐ.பி.எஸ். என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். குற்றவாளிகளைக் கையாள்வதில் அதிரடியான அணுகுமுறையைக் கொண்ட காவல் அதிகாரியாக அவர் நடித்திருப்பதாகப் படத்தின் முன்னோட்டம் தெரிவிக்கிறது.
வரும் நவம்பர் 6-ந்தேதி தீபாவளி வெளியீடாக ‘சீன்’ திரைப்படம் திரைக்கு வர உள்ளது. சூர்யா - ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், சூர்யாவின் 49-வது திரைப்படத்தை ‘மண்டாடி’ படத்தின் இயக்குநர் மதிமாறன் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படம் உருவாக உள்ளது.
இந்நிலையில், ‘வாடிவாசல்’ படத்திற்கு முன்பாக மற்றொரு திரைப்படத்தில் சூர்யா நடிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தப் படத்தை நிறைவு செய்த பிறகே மதிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மேலும், மதிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள சூர்யாவின் 49-வது படம் கடலோரப் பின்னணியில் அமைந்த கதைக்களத்தைக் கொண்டிருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.