சென்னை,
தனுஷ் நடித்துள்ள ‘ஓம்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், ‘அமரன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஓம்’ படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.
இப்படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி, மம்முட்டி, நஸ்ருதீன் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஓம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்நிலையில், ‘ஓம்’ படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு அடுத்த நாளே ‘ஓம்’ திரைப்படம் வெளியாகிறது. இதனால் இரு படங்களுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக ‘ஓம்’ படத்தின் வெளியீட்டை தள்ளிவைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, ‘ஓம்’ திரைப்படம் வரும் நவம்பர் 27-ம் தேதி அல்லது டிசம்பர் 2-ம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், வெளியீட்டு தேதி மாற்றம் தொடர்பாக படக்குழு தரப்பில் இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.