சினிமா செய்திகள்

'அரசன்' படப்பிடிப்பு தாமதத்திற்கு சிம்பு காரணமா? திருப்பூர் சுப்ரமணியம் சொன்ன பதில்

“அரசன்” திரைப்படம் 2027ஆம் ஆண்டு பொங்கலுக்கு வரும் என்று பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

சென்னை,

'அரசன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதற்கு நடிகர் சிலம்பரசன்தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் திருப்பூர் சுப்ரமணியம் பேசியுள்ளார்.

'அரசன்' திரைப்படம்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் திரைப்படம் 'அரசன்'. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ஆண்ட்ரியா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரக்கனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பொங்கல் வெளியீடு இல்லை!

சுமார் 4 மாதங்களுக்கு முன்பு 'அரசன்' படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் படத்தின் தயாரிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. பின்னர் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, இப்படம் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிலம்பரசன், 'அரசன்' பொங்கலுக்கு வெளியாகாது என்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசும்போது, "2027-ம் ஆண்டு பொங்கலுக்கு 'அரசன்' திரைப்படம் வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பொங்கலுக்கு படம் வெளியாகாது. படத்தின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் செய்ய நாங்கள் விரும்பவில்லை. ரசிகர்கள் அனைவரும் பெருமைப்படும் வகையில் 'அரசன்' தரமான சம்பவத்தை செய்யும்" என்று கூறியிருந்தார்.

தீபாவளிக்கு 8 நிமிட காட்சிகள்?

இதற்கிடையே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 'அரசன்' திரைப்படத்திலிருந்து சுமார் 8 நிமிட பிரத்யேக காட்சிகளை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் படத்தின் கதாபாத்திர அறிமுகங்கள் மற்றும் சில முக்கிய காட்சிகள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்புவால் தாமதமாகவில்லை!

இந்த நிலையில், 'அரசன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதற்கு நடிகர் சிலம்பரசன்தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் திருப்பூர் சுப்ரமணியம் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "'அரசன்' படப்பிடிப்பின்போது சிலம்பரசனையும் இயக்குநர் வெற்றிமாறனையும் சந்தித்துப் பேசினேன். அப்போது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிடலாம் என்று தெரிவித்தேன். ஆனால், படத்தை மிகவும் சிறப்பாகக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக வெற்றிமாறன், சிலம்பரசன், அனிருத் ஆகியோர் கடுமையாக உழைத்து வருகின்றனர். சிலம்பரசனால் படப்பிடிப்பு தாமதமாவதாக வெளியாகும் செய்திகள் உண்மையல்ல. அவர் முழு மூச்சுடன் படத்தில் நடித்துக் கொடுக்கத் தயாராகவே இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT