சினிமா செய்திகள்

அரசியலில் குதிக்கும் சூர்யா? இணையத்தில் சூடுபறக்கும் விவாதம்

விஜய் பாணியில் சூர்யாவும் அரசியலில் களமிறங்க திட்டமிட்டுள்ளாரா? என்ற விவாதம் தற்போது இணையத்தில் அதிகரித்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, 1997-ஆம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு நந்தா, காக்க காக்க, பிதாமகன், சிங்கம், ஏழாம் அறிவு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்த அவர், தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான கருப்பு திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது சூர்யா, விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிப்பைத் தாண்டி, தனது அகரம் அறக்கட்டளை மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கி சமூகப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

ரசிகர் மன்ற கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பேச்சு

இந்நிலையில், அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நிர்வாகி ஒருவர், "காலம் முடிவு செய்துவிட்டது. கடவுள் முடிவு செய்துவிட்டார். அவர் மக்கள் தலைவராக வருவதை யாராலும் தடுக்க முடியாது" என்று தெரிவித்தார்.

இந்தப் பேச்சுக்கு கூட்டத்தில் பங்கேற்ற ரசிகர்கள் பலத்த கரவொலியுடன் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, சூர்யா அரசியலில் களமிறங்க உள்ளாரா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் தீவிரமடைந்துள்ளது.

அரசியல் வருகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை

அண்மையில் நடிகர் விஜய் அரசியலில் முழுமையாக ஈடுபட்டுள்ள நிலையில், அதேபோல் சூர்யாவும் அரசியல் பயணத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருப்பினும், சூர்யா தரப்பில் அரசியல் வருகை தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது ரசிகர் மன்ற நிர்வாகியின் பேச்சே இந்த விவாதத்திற்கு காரணமாகியுள்ளது.

SCROLL FOR NEXT