சினிமா செய்திகள்

23ஆம் தேதி வெளியாகிறதா ஜனநாயகன் திரைப்படம்..? வெளியான தகவல்

பல கட்ட பரிசீலனைகளுக்குப் பிறகு படத்திற்கு 'ஏ' (A) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை,

'ஜனநாயகன்' திரைப்படம் ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனநாயகன்

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். அரசியல் மற்றும் ஆக்‌ஷன் அம்சங்கள் கலந்த இந்த திரைப்படம் குறித்த ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

படத்திற்கு 'ஏ' சான்றிதழ்

முதலில் பொங்கல் வெளியீடாக எதிர்பார்க்கப்பட்ட இப்படம், பின்னர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் வெளியானது. ஆனால், மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் (CBFC) சான்றிதழ் நடைமுறைகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, பல கட்ட பரிசீலனைகளுக்குப் பிறகு படத்திற்கு 'ஏ' (A) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், படத்தில் சில காட்சிகளை நீக்கவும், சிலவற்றை மாற்றியமைக்கவும் தணிக்கை வாரியம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஜூலை 23-ல் வெளியாகிறதா..?

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, 'ஜனநாயகன்' திரைப்படம் ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக ஜூலை 24-ம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருந்தநிலையில் ஒருநாள் முன்கூட்டியே வெளியாக உள்ளது.

படத்தின் ஓட்ட நேரம் 183 நிமிடங்கள் (3 மணி நேரம் 3 நிமிடங்கள்) என்று கூறப்படுகிறது. எனினும், படத்தின் வெளியீட்டு தேதி குறித்து தயாரிப்பு நிறுவனம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டிரெய்லர்

முன்னதாக 'ஜனநாயகன்' திரைப்படத்தின் புதிய டிரெய்லர் தொடர்பாகவும் தகவல் வெளியாகி இருந்தது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய டிரெய்லர் கட் தயாராகி வருவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. ரிலீஸ் தேதி அறிவிப்புடன் இந்த டிரெய்லரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.