மலையாள சினிமா உலகில் தனக்கென ஒரு வலுவான இடத்தையும் டொவினோ தாமஸ் பிடித்திருக்கிறார். சினிமாத் துறைக்கு வரும் முன்பாக, பல விளம்பர படங்களுக்கு மாடலாக இருந்தவர் டொவினோ தாமஸ். அந்த பிரபலமான விளம்பர படங்கள் தான் அவருக்கு சினிமா வாய்ப்பைப் பெற்றுத் தந்தன. 2012-ம் ஆண்டு சஜீவன் அந்திக்காடு இயக்கத்தில் வெளியான பிரபுவின்ட மக்கள் படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமானார், டொவினோ தாமஸ். 2013-ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ஏ.பி.சி.டி படம் டொவினோ தாமஸை மக்களுக்கு அடையாளம் காட்டியது. 2017-ம் ஆண்டு வெளியான ஒரு மெக்சிகன் அபாரத என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு டொவினோவுக்கு கிடைத்தது. தொடர்ந்து கோதா, தரங்கம் ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார்.
இதுவரை 23 படங்களில் நடித்திருந்தாலும், டெவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படங்கள் ஏழு தான். அதுவும் கடந்த 2 ஆண்டுகளுக்குள் தான் இந்த ஏழு படங்களும் வெளியாகி இருக்கிறது. ஏஆர்எம் திரைப்படம் மூலம் ரூ. 100 கோடி வசூலித்த மலையாள நடிகர்களில் ஒருவர் என்கிற சாதனையையும் வைத்துள்ளார்.
டொவினோ தாமஸ் நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கயாடு லோஹர் நாயகியாக நடித்த இப்படம் ஏப்ரல் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட டொவினோவிடம், "உங்களுக்கும் துல்கர் சல்மானுக்கும் இடையே என்ன பிரச்னை?" எனக் கேட்கப்பட்டது. அதனைக் கேட்டு சிரித்த டொவினோ, “எங்களுக்குள் என்ன பிரச்னை? இப்போதே துல்கருக்கு அழைக்கவா? நாங்கள் ஒன்றாக இருக்கும்போது இந்த மாதிரி வதந்திகளையெல்லாம் நினைத்து சிரிப்போம்” என்றார்.
‘லோகா’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது, அதில் நீங்களும் நடித்தீர்கள். ஆனால் படக்குழுவினர் உங்கள் பெயரை எங்குமே குறிப்பிடவில்லையே ஏன்? எனக் கேட்கப்பட “ஏன் என்னைப்பற்றி பேசவில்லை என கண்டிப்பாக நான் அவர்களிடம் கேட்கிறேன். ஆனால் நாங்கள் எல்லோரும் பல வருடங்களாக ஒன்றாக சேர்ந்து நடித்து வருகிறோம். நான் ஒரு உதவி இயக்குநராக தான் என் பயணத்தை துவங்கினேன்.உதவி இயக்குநராக என் முதல் படமே துல்கர் சல்மான் நடித்த ‘தீவ்ரம்’ படம் தான். அதன் பிறகு துல்கர் சல்மான் நடித்த ‘ஏ.பி.சி.டி’ என்ற படத்தில் நான் வில்லனாக நடித்தேன். அன்றிலிருந்து இன்றுவரை அவர் என்னிடம் மிக இனிமையானவராக தான் நடந்து வருகிறார். நீங்கள் சொன்னதை பதிவு செய்து கொடுத்தீர்கள் என்றால், அதை கேட்டு நாங்கள் எல்லோரும் சிரிப்போம்.
துல்கர் சல்மான் என் நெருங்கிய நண்பர். வேண்டுமென்றால் எங்கள் வாட்ஸ் ஆப் சாட்களை காண்பிக்கிறேன். அப்போது தெரியும் எங்கள் நட்பின் நெருக்கம் என்ன என்று. வெளியே இருந்து இதுபோன்ற வதந்திகளை கொளுத்திப் போடுவது சுலபமானது. ஆனால் இது போன்ற விஷயங்களை படிக்கும் போது நாங்கள் சிரிக்க தான் செய்வோம். அந்தப் படத்திலிருந்த அனைவரும் என் நண்பர்கள் தான். இப்போது அந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் வேலைகள் நடந்து வருகிறது. அப்படத்திற்காக நாங்கள் இங்கு வந்து மீண்டும் அமரும் போது நீங்கள் இதே கேள்வியை கேளுங்கள். இந்த மாதிரி ரூமர்ஸ் எப்படி வருகிறது, இதன் மூலம் அவர்களுக்கு கிடைப்பதென்ன?” என்றார்.