மும்பை,
'மகாபாரதம்' தொலைக்காட்சித் தொடரில் கிருஷ்ணராகவும், 2002-ம் ஆண்டு ஒளிபரப்பான 'ராமாயணா' தொடரில் ராமராகவும் நடித்த நிதிஷ் பரத்வாஜ், இப்படம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட இதிகாசத் திரைப்படம் 'ராமாயணா'. இரண்டு பாகங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. நமித் மல்ஹோத்ரா மற்றும் நடிகர் யாஷ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் ரூ.4,000 கோடி எனக் கூறப்படுகிறது. இதில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யாஷ், லட்சுமணனாக ரவி துபே, அனுமனாக சன்னி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், 'மகாபாரதம்' தொலைக்காட்சித் தொடரில் கிருஷ்ணராகவும், 2002-ம் ஆண்டு ஒளிபரப்பான 'ராமாயணா' தொடரில் ராமராகவும் நடித்த நடிகர் நிதிஷ் பரத்வாஜ், இப்படம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதாவது, படத்தின் டிரெய்லர் வெளியானபோது அதைப் பாராட்டியதுடன், ஆஸ்கர் விருதைப் பெறும் அளவுக்கு இப்படம் இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால், படம் வெளியான பிறகு தனது பாராட்டைத் திரும்பப் பெற்றுள்ளார்.
ராவணன் ஒரு தாராளவாத, நியாயமான மன்னராகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும், ராமரின் மாண்பு, கடமை, தியாகம் மற்றும் அறநெறிகள் சரியாக வெளிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ராமர் சாதாரண மனிதராகவும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத முகத்துடனும் காட்டப்பட்டிருப்பது ராமாயணத்தின் அடிப்படை நோக்கத்தை மாற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுமார் ரூ.4,000 கோடி செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் நிதி ஆதாரங்கள் குறித்தும் நிதிஷ் பரத்வாஜ் கேள்வி எழுப்பியுள்ளார். லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிதி ஆதாரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுபோன்ற இதிகாசம் மற்றும் வரலாற்றுப் பின்னணி கொண்ட கதைகளைத் திரைப்படமாக உருவாக்கும்போது, அவற்றின் திரைக்கதைகளை ஆய்வு செய்வதற்கு இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ICHR) போன்ற அமைப்பு இருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். நிதிஷ் பரத்வாஜின் இந்த விமர்சனங்கள் தற்போது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.