சினிமா செய்திகள்

'கும்பளங்கி நைட்ஸ்' இயக்குனரின் அடுத்த பட நாயகன் இவரா?

இயக்குனர் மது சி. நாராயணன் தனது அடுத்த படத்தை எப்போது இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வந்தது.

மலையாள சினிமாவில் முத்திரை பதித்த ‘கும்பளங்கி நைட்ஸ்’

2019-ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘கும்பளங்கி நைட்ஸ்’. இயக்குநர் மது சி. நாராயணன் இயக்கிய இந்த படம், கேரளாவின் கொச்சி அருகே உள்ள கும்பளங்கி கிராமத்தை பின்னணியாகக் கொண்டு நான்கு சகோதரர்களின் உறவு, காதல் மற்றும் குடும்ப பாசத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.

இந்த படத்தில் சவுபின் சாகிர், ஷேன் நிகம், ஸ்ரீநாத் பாசி, மேத்யூ தாமஸ், பஹத் பாசில் மற்றும் அன்னா பென் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஷ்யாம் புஷ்கரன் எழுதிய திரைக்கதை மற்றும் நடிகர்களின் இயல்பான நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அடுத்த படம் எப்போது? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

‘கும்பளங்கி நைட்ஸ்’ வெளியாகி 7 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இயக்குநர் மது சி. நாராயணன் தனது அடுத்த படத்தை எப்போது இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்த நிலையில், மதுவின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபல இளம் நடிகர் நஸ்லெனை கதாநாயகனாக வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்க அவர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

ஜூலையில் தொடங்கும் பணிகள்

இந்த புதிய படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் வரும் ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு தொடர்பான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘கும்பளங்கி நைட்ஸ்’ மூலம் தனித்துவமான கதை சொல்லல் பாணியை வெளிப்படுத்திய மது சி. நாராயணன், நஸ்லெனை வைத்து உருவாக்கவுள்ள புதிய படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக திரையுலக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.