மும்பை,
இந்தி நடிகர்கள் ஆயுஷ்மான் குரானா, துஷார் கபூர் உள்ளிட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஐ.டி. நிறுவன ஊழியர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
இந்தி நடிகர் டைகர் ஷெராப் காரில் சென்றபோது அவரை நோக்கி சமீபத்தில் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம் இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் மர்மநபர் ஒருவர் இந்தி நடிகர் துஷார் கபூருக்கு ரூ.5 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்து இருந்தார். மிரட்டல் விடுத்த நபர்தான் தாதா ஹரி பாக்சர் என கூறியிருந்தார்.
இது தொடர்பாக நடிகர் துஷார் கபூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணை யில் மர்மநபர் நடிகர் ஆயுஷ்மான் குரானா உள்ளிட்டவர்களுக்கும் மிரட்டல் விடுத்து இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் நடிகர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் பெங்களூருவில் வசித்து வருவது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்தனர். விசாரணையில் பிடிப்பட்டவர் பீகாரை சேர்ந்த ஐ.டி. நிறுவன என்ஜினீயர் வைபவ் மிஸ்ரா(வயது30) என்பது தெரியவந்தது. அவர் வேலையில்லாத விரக்தியில் நடிகர்களுக்கு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. மேலும் அவர் மனநல பிரச்சினையிலும் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளையில் வாலிபருக்கு தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்பு எதுவும் இல்லை என போலீசார் கூறியுள்ளனர்.