சினிமா செய்திகள்

எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் விஜய் சந்திக்காதது வருத்தம் - இயக்குநர் சேரன்

கரூர் சம்பவத்தில் விஜய் பக்கம் நின்ற எடப்பாடியாரை சென்று பார்க்காமல் நிராகரித்தது வருத்தமாக உள்ளதாக இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குனரும் நடிகருமான சேரன், விஜய்யின் அரசியல் வருகையை கடுமையாக விமர்சித்து வந்தார். நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்த சேரன், விஜய்யை துவக்கத்தில் இருந்தே விமர்சிக்க தொடங்கினார். தற்போது, சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி அமைந்துள்ளது. சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற அன்றே முதல்-அமைச்சர் விஜய், சென்னை முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் இல்லங்களுக்கு நேரில் சென்றார்.

முதல்-அமைச்சர் விஜய் சமீபத்தில்அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு, சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பு என 2 தரப்பாக பிளவு பட்டுள்ளது. ஆனால் முதல்-அமைச்சர் விஜய் இதுவரை எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்று சந்திக்கவில்லை.

இது தொடர்பாக இயக்குநர் சேரன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு எடப்பாடி பழனிசாமி. ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என வல்லுநர்கள் ஆரூடம் சொன்னபோது 4 வருடம் ஆட்சி கவிழாமல் காப்பாற்றி அதிமுக மானம் காத்த செயல் வீரர். கடந்த தேர்தலில் இவர் மட்டுமே ஒவ்வொரு தொகுதிகளாக சென்று பரப்புரை செய்து மக்களை சந்தித்தார்.கூடவே இருந்த கட்சியினர் இவரை தனித்து விட்டாலும் கலங்கிவிடமாட்டார். அது அவருக்கு புதிதுமல்ல. எல்லோரையும் பார்க்கும் இன்றைய முதலமைச்சர், கரூர் சம்பவத்தின்போது முதலில் அவர் பக்கம் நின்ற எடப்பாடியாரை சென்று பார்க்காமல் நிராகரித்தது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் இவையெல்லாம் கடந்தும் அவர் நிற்பார்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் சேரன்.