மும்பை,
“கே.ஜி.எஃப். படங்களின் வெற்றிக்குப் பிறகு ரூ.7 முதல் ரூ.8 கோடி வரை நான் சம்பளம் கேட்பதாகச் சொல்கிறார்கள். நான் இதுவரை நடித்த திரைப்படங்களே மிகக் குறைவு. அப்படியிருக்கும்போது அவ்வளவு பெரிய தொகையை எப்படி சம்பளமாகக் கேட்க முடியும்? அதனால் அது வதந்திதான்” என்றார் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி.
இந்திய நடிகையும் மாடலுமான ஸ்ரீநிதி ஷெட்டி, 2016-ம் ஆண்டு ‘மிஸ் சுப்ராநேஷனல் இந்தியா’ பட்டத்தை வென்றவர். யாஷ் நடிப்பில் வெளியாகி இந்திய அளவில் கவனம் பெற்ற ‘கே.ஜி.எஃப்.’ படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
‘கே.ஜி.எஃப்.’ படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டியின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்ததைத் தொடர்ந்து, அவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. தமிழில் விக்ரமுடன் ‘கோப்ரா’ படத்திலும், தெலுங்கில் நானியுடன் ‘ஹிட்-3’ படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் ‘தெலுசு கதா’ படத்திலும் நடித்திருந்தார்.
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஸ்ரீநிதி ஷெட்டியிடம், ‘கே.ஜி.எஃப்.’ படங்களின் வெற்றிக்குப் பிறகு அதிக சம்பளம் கேட்பதாக வெளியான தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “கே.ஜி.எஃப். படங்களின் வெற்றிக்குப் பிறகு ரூ.7 முதல் ரூ.8 கோடி வரை நான் சம்பளம் கேட்பதாகச் சொல்கிறார்கள். நான் இதுவரை நடித்த திரைப்படங்களே மிகக் குறைவு. அப்படியிருக்கும்போது அவ்வளவு பெரிய தொகையை எப்படி சம்பளமாகக் கேட்க முடியும்? அதனால் அது வதந்திதான்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “கே.ஜி.எஃப். படங்களுக்குப் பிறகு அவசரப்பட்டுத் திரைப்படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. பணம் சம்பாதிப்பது மட்டுமே எனக்கு நோக்கமாக இருந்திருந்தால், கடந்த சில ஆண்டுகளில் 30 முதல் 40 திரைப்படங்களில் நடித்திருக்க முடியும்.ஆனால், வெறும் பணத்துக்காகப் படங்களை ஒப்புக்கொள்ளாமல், நல்ல கதைக்கும் தரமான கதாபாத்திரங்களுக்கும் மட்டுமே முன்னுரிமை அளிக்கிறேன்” என்றார்.