சினிமா செய்திகள்

"ஒரு குழந்தை பாதிக்கப்பட்டாலும் சமுதாயத்திற்கு நல்லதல்ல” - லதா ரஜினிகாந்த்

அதிகரித்து வரும் பாலியல் வன்முறை சம்பவம் குறித்து லதா ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் சமீபகாலமாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவது அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதிகரித்து வரும் பாலியல் வன்முறை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், பாதுகாப்பு என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு என்று கூறியுள்ளார்.

சமூகத்தின் அலட்சியமே முக்கிய காரணம்

இது தொடர்பாக லதா ரஜினிகாந்த் கூறியதாவது: ஒரே நாளில் 5 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான செய்தி கேட்டு எனது மனம் துடிதுடித்துப் போனது. ‘நம்மைக் காப்பாற்ற யாரும் இல்லையா?' என்ற உணர்வு குழந்தைகளுக்கு வரக்கூடாது. குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கு பெரியவர்களின் கண்காணிப்பு இல்லாததும், சமூகத்தின் அலட்சியமும் காரணம். பாதுகாப்பு என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு.

உடனடி நடவடிக்கை அவசியம்

ஒரு குழந்தை பாதிக்கப்பட்டாலும் அது நம் சமுதாயத்திற்கு நல்லது இல்லை. அதுவே தவறான ஒரு முன்னுதாரணமாக மாறிவிடுகிறது.குப்பைத் தொட்டியில் வீசப்படும், கடத்தப்படும், சித்திரவதைக்கு உள்ளாகும் குழந்தைகளை பாதுகாக்க சமூகமாக இணைந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடைய மக்கள் மேடை இயக்கம் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக நீண்ட காலமாக சொல்லி வருகிறோம். முன்பெல்லாம் கைவிடப்பட்டோ, காணாமல் போய் தான் குழந்தைகள் கொடுமைகள் அனுபவித்தார்கள். இப்போது பார்த்தால் யார் வேண்டுமானாலும் குழந்தைகளை தூக்கிட்டு போகலாம், என்ன மாதிரியான சித்திரவதை வேண்டுமானாலும் அனுபவிக்கலாம் என அவர்கள் எவ்வளவு தான் சித்ரவதை அனுபவிப்பார்கள். இதுபோன்ற பாதுகாப்பு இல்லாத அந்த சூழலை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது” என்றார்.