சினிமா செய்திகள்

விஜய் முதலமைச்சரானது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது- நடிகை ரோஜா

சமீபத்திய பேட்டியில் கலந்து கொண்ட ரோஜா முதல்-அமைச்சர் விஜய் குறித்து பேசியுள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த ரோஜா, பின்னர் அரசியலில் கவனம் செலுத்தி ஆந்திரப் பிரதேச சட்டசபை உறுப்பினராகவும், அமைச்சராகவும் பணியாற்றினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

பாரி இளவழகன் இயக்கியுள்ள 'அன்பே டயானா' திரைப்படத்தில் ரோஜா முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி நடைபெற்று வரும் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார்.

விஜய் குறித்து மனம் திறந்த ரோஜா

இந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் நடிகர் விஜய் குறித்து ரோஜா பேசியுள்ளார். அவர் கூறியதாவது: "விஜய் முதலமைச்சரானது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. அவருடன் நான் ஒரு பாடலில் மட்டுமே நடித்திருக்கிறேன். அந்த பாடல் படப்பிடிப்பின்போது அவரை பார்த்திருக்கிறேன். அவர் அதிகம் பேச மாட்டார். படப்பிடிப்பு தளத்தில் கூட ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்திருப்பார். ஆனால் காட்சி படமாக்கும்போது மட்டும் அனைவருடனும் கலகலப்பாக பழகுவார்." என்றார்.

'அரசியலில் பேசும் திறன் முக்கியம்'

மேலும் அவர், "இப்படி அமைதியாக இருக்கும் ஒருவர் அரசியலில் எப்படி சாதிப்பார் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. ஒரு கட்சியை நடத்த வேண்டுமென்றால் மக்களிடம் தொடர்ந்து பேச வேண்டும். எல்லா விமர்சனங்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையென்றாலும், மக்களுக்கு சொல்ல வேண்டிய விஷயங்களை தெளிவாக எடுத்துச் செல்ல வேண்டும். அரசியலில் அதற்கான பொறுப்புகள் அதிகம்" என்று தெரிவித்துள்ளார்.