சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான எச்.வினோத், 'சதுரங்க வேட்டை' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய அவர், நடிகர் அஜித்தை வைத்து 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', 'துணிவு' ஆகிய திரைப்படங்களை இயக்கினார். தற்போது தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தை இயக்கியுள்ள எச்.வினோத், அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அளித்த பேட்டியில் தனது திரைப்பயணம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "நான் இயக்கிய படங்களிலேயே 'வலிமை' திரைப்படம்தான் மிகக் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது. அந்த அனுபவம் எனக்கு பல பாடங்களை கற்றுக் கொடுத்தது" என்று தெரிவித்தார்.
மேலும், "'வலிமை' படத்தை உருவாக்கும்போது, அஜித் நடித்த 'விசுவாசம்' திரைப்படத்தை ஒரு அளவுகோலாக எடுத்துக் கொண்டோம். அந்தப் படம் மிகப்பெரிய வர்த்தக வெற்றி பெற்றதுடன், குடும்ப ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு அழைத்து வந்தது. அதனால், அடுத்த படமும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது" என்றார்.
"உண்மையில், 'விசுவாசம்' போன்ற ஒரு திரைப்படத்தை என்னால் உருவாக்க முடியாது என்பது எனக்குத் தெரியும். ஏனெனில், அந்த வகை கதை சொல்லும் பாணி என் இயல்பான படைப்பாற்றலுக்கு பொருந்தாது. இருந்தாலும், அஜித் சார் படம் என்பதால், வணிக ரீதியாகவும் குடும்ப ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையிலும் படத்தை உருவாக்க முயற்சித்தோம்" என்று எச்.வினோத் விளக்கமளித்தார். 'வலிமை' திரைப்படம் குறித்த எச்.வினோத்தின் இந்த வெளிப்படையான கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.