சினிமா செய்திகள்

நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் டிரைலர் வெளியீடு; கதை என்ன...?

நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

சென்னை

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தகேங்க்ஸ்டர் கேங்க்ஸ்டர் திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் இணையத்தில் பல கோடி பார்வையாளர்களை கடந்து பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜகமே தந்திரம் படத்தின் டிரைலரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் வெளியாக இருந்த ஜகமே தந்திரம் திரைப்படம் கொரோனா ஊரடங்கால் ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இந்த படத்தில் தனுசுடன் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன், லால் ஜோஸ், ஆகியோர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

டிரைலர் பக்கத்தில் படத்தின் கதைக்களத்தையும் வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

மதுரையைச் சேர்ந்த ரவுடி சுருளி. லண்டன் நிழலுலகில் ஆயுதக் கடத்தல், தங்க வியாபாரம் ஆகியவற்றில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் சிவதாஸ் கூட்டத்தில் ஊடுருவ, அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள, லண்டனில் அரசியல்வாதிகளோடு கூட்டு வைத்திருக்கும் பெரிய தாதா பீட்டர் என்பவனால் சுருளி வேலைக்கு எடுக்கப்படுகிறான்.

மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்களின் பார்வையில், அவர்கள் வீடு என்று நினைக்கும் இடத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான போராட்டமே இந்தப் படம் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.