விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான பகவதி படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஜெய். இதையடுத்து சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். இதுவரை 25 படங்களில் நடித்துள்ள ஜெய், தற்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள சிவ சிவா படத்துக்கு நடிகர் ஜெய் இசையமைத்துள்ளார்.
எஸ்.எஸ்.டி. ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க நடிகர் ஜெய் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தை எய்தவன் திரைப்படத்தின் இயக்குநர் சக்தி ராஜசேகரன் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ப்ரிட்டோ மைக்கேல் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தை எஸ்.எஸ்.டி. புரொடக்ஷன்ஸ் சார்பாக பெரோஸ் ஹுசைன் ஷெரிப் தயாரிக்கிறார்.
சமகாலத்தில் பெருகி வரும் முக்கியமான சமூக பிரச்சனையை மையமாக வைத்து, ஆக்ஷன் திரில்லர் ஜானரில் இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படத்தில் கதாநாயகி மற்றும் பாடல்கள் எதுவும் இல்லை என்று இயக்குநர் தெரிவித்துள்ளார். கதைக்கு தேவைப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகிற மே மாத வாக்கில் தொடங்குகிறது. ஸ்ரீ சரவணன் இந்தப் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் திருத்தணி சுற்று வட்டார பகுதிகளில் நடக்க இருக்கிறது. இந்தப் படம் குறித்த் அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகும் என்று தெரிகிறது.